உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் – புகையிரத நிலைய அதிபர் சங்கம் தீர்மானம்.

பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (09) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க புகையிரத நிலைய அதிபர் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதனை தொடர்ந்து கொழும்பு, கோட்டை மற்றும் பதுளைக்கு செல்லும் இரவு நேர அஞ்சல் புகையிரதங்கள், திருகோணமலை மற்றும் அங்கிருந்து மட்டக்களப்பில் இருந்து ரம்புக்கனைக்கு செல்லும் இரவு அஞ்சல் புகையிரதம் உட்பட பல ரயில்கள் இரத்து செய்யப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட 14 பிரச்சினைகளை முன்வைத்து நிலைய அதிபர் சங்கம் இன்று பிற்பகல் இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்திருந்தன.

மேலும் நள்ளிரவு 12 மணிக்கு மேல் இயக்கப்படவிருந்த அனைத்து புகையிரதங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்களால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தொழில்சார் நடவடிக்கையின் காரணமாக, இயங்குவதற்கு தயாராக இருந்த அஞ்சல் புகையிரதங்களை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக புகையிரத திணைக்களம் குறிப்பிடுகிறது.

இதற்கிடையில் நாளை (10) இயக்க திட்டமிடப்பட்டுள்ள பல அலுவலக புகையிரதங்களை இயக்குவதற்கு தேவையான அதிகாரிகளை பணியமர்த்த திட்டமிடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக நாளை (10) புகையிரத சீசன் பயணச்சீட்டு வைத்திருக்கும் பயணிகள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் சீசன் பயணச்சீட்டை போக்குவரத்துக்கு பயன்படுத்துவதற்கு தேவையான வசதிகளை போக்குவரத்து அமைச்சு வழங்கியுள்ளது.

Related posts

சமையல் ஏரிவாயு விநியோகம் இன்று முதல் இடைநிறுத்தம்

கணக்காய்வு அதிகாரிகள் இன்றும் தொழிற்சங்க நடவடிக்கையில்

ரிஷாதுக்கு எதிரான பிடியாணை கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு