வணிகம்

இந்தியா – இலங்கை மெய்நிகர் B2B சந்திப்பு

(UTV | கொழும்பு) – இந்தியாவின் பி.எச்.டி வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் (PHDCCI) இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனங்களின் சமாசம் (FCCISL) மற்றும் கொழும்பு வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய-இலங்கை B2B மெய்நிகர் சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்திருந்தது.

2. இந்த சந்திப்பின் ஆரம்ப அமர்வில் கலந்து கொண்டிருந்த கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக பிரிவின் தலைமை அதிகாரி டாக்டர். ராகேஷ் பாண்டே, “இவ்வாறான இணைய ரீதியிலான கருத்தரங்குகள் மூலமாக இருதரப்பினரும் பரஸ்பரம் நன்மை தரக்கூடிய விடயங்களை உறுதிசெய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் அதேநேரம் இருதரப்பினரதும் தேவைகளை சிறந்த முறையில் புரிந்து கொள்வதற்கும் வாய்ப்புக்களை வழங்குகின்றது”, என்று குறிப்பிட்டார். அத்துடன் கொவிட்-19க்கு பின்னரான காலப்பகுதியில் மேலெழும் சவால்களை எதிர்கொள்வதற்கும் இருநாடுகளினதும் நலனை மேம்படுத்துவதற்காகவும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

03. PHDCCI உப தலைவர் திரு. பிரதீப் முல்தானி, இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் வர்த்தகப் பிரிவுக்கான அமைச்சர் உபேக்‌ஷா சமரதுங்க, FCCISL செயலாளர் நாயகம் திரு. அஜித் டி பெரேரா, கொழும்பு வர்த்தக சம்மேளனத்தின் கௌரவ தலைவர் திரு.சாரங்க விஜேரத்ன உள்ளிட்ட 175க்கும் அதிகமான பேராளர்கள் இந்த ஆரம்ப அமர்வில் கலந்து கொண்டனர். இந்த B2B சந்திப்பில் விவசாயம் மற்றும் உணவு உற்பத்தி, சுகாதார பராமரிப்பு மற்றும் மருந்துதுறை, பொறியியல் சார் பொருட்கள், ஆடைத்துறை, வீட்டு பாவனை பொருட்கள், வங்கியியல் மற்றும் நிதி, பொதியிடல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச்சார்ந்த இந்திய இலங்கை நிறுவனங்களின் பிரதிநிதிகள் 50க்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

04. கொவிட்19 நெருக்கடி நிலையின்போது இரு தரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார தொடர்புகளை மேம்படுத்தும் நோக்குடன் இரு தரப்பு வர்த்தக மற்றும் கைத்தொழில் சார் அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்படும் பல்வேறு இணையரீதியிலனா அமர்வுகளில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் வினைத்திறன் மிக்க பங்களிப்பினை வழங்கிவருகிறது. தெற்காசிய பிராந்தியத்தில் வர்த்தக மேம்பாட்டின் தோற்றப்பாடுகள் என்ற தலைப்பில் 01 மே 2020 அன்று நடைபெற்ற வீடியோ மூலமான மாநாடு, கொவிட்டுக்கு பின்னரான காலப்பகுதியில் இந்திய கம்பனிகளுக்கு இலங்கை சந்தையில் காணப்படும் வாய்ப்புக்கள் குறித்து 05 மே 2020 அன்று நடைபெற்ற மாநாடு, இலங்கையில் உள்ள இந்திய நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்துக்கும் இடையில் 2020 மே 12 ஆம் திகதி நடைபெற்ற மெய்நிகர் செயலமர்வு, ASSOCHAM மற்றும் சிலோன் வர்த்தக சம்மேளனம் இணைந்து 16 மே 2020 அன்று ஏற்பாடு செய்திருந்த கொவிட்டுக்கு பின்னரான பொருளாதார மீட்சி குறித்த சந்திப்பு, FIEO அமைப்பினால் 22 மே 2020 அன்று ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்த இணைய ரீதியான கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்வுகளை இங்கு குறிப்பிடலாம்.

5. 2020 ஜூன் 25 ஆம் திகதி சிலோன் வர்த்தக சம்மேளனத்தின் வருடாந்த பொதுச்சபை கூட்டத்தில் உரை நிகழ்த்தியிருந்த இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே, கொவிட்டுக்கு பின்னரான பொருளாதார சவால்களை வினைத்திறன் மிக்க வகையில் எதிர்கொள்வதற்கு வழிசமைக்கும் வகையில் அபிவிருத்தி, சமாதானம் மற்றும் பாதுகாப்பு உள்ளடங்கலாக இலங்கையுடனான ஒத்துழைப்பினை உறுதிப்படுத்துவதற்கான தலைமைத்துவ அடிப்படையிலான பங்களிப்புக்கள் அவசியம் என சுட்டிக்காட்டியிருந்ததை இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிடவேண்டியது அவசியமானதாகும். அத்துடன் FICCI மற்றும் சர்வதேச உறவுகள் மற்றும் தந்திரோபாய கற்கை நெறிகளுக்கான லக்‌ஷ்மன் கதிர்காமர் நிலையம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இந்திய இலங்கை பொருளாதார ஒத்துழைப்பினை மேலும் வலுவாக்குதல் என்ற தொனிப்பொருளிலான மெய்நிகர் அமர்வொன்றில் உரை நிகழ்த்தியிருந்த உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே அவர்கள் கொவிட் 19 காரணமாக ஏற்பட்டுள்ள முன்னொருபோதும் இல்லாத சவால்களை துரிதமாகவும் வினைத்திறன் மிக்க வகையிலும் எதிர்கொள்வதற்கு இலங்கை இந்தியா இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பினை மேலும் வலுவாக்கவேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

சுற்றுலா பயணிகளின் வருகையில் அதிகரிப்பு

ஸ்ரீலங்கா டெலிகொம் அணியை வீழ்த்திய HNB Finance இன் விற்பனை சேவைகள் C பிரிவு அணி

சோளத்திற்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்-விவசாய அமைச்சு