அரசியல்

இந்திய ஜனாதிபதியின் அரச விருந்துபசாரத்தில் ஜனாதிபதி அநுரவின் உரை

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களே, பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, மாண்புமிகு அமைச்சர்கள், விசேட விருந்தினர்கள்,

ஆயுபோவன்,வணக்கம், நமஸ்தே, மாலை வணக்கம்,

ஜனாதிபதி அவர்களே, உங்கள் அன்பான கருத்துக்களை நான் மிகவும் உயர்வாகக் கருதுகிறேன்.

உங்கள் நாட்டில் எனது குழுவுக்கும் எனக்கும் அளிக்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு உங்களுக்கும் இந்திய அரசுக்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எமது இந்திய நண்பர்களுக்கு இலங்கை மக்களின் அன்பான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் இராஜதந்திரம் மற்றும் புவியியல் நெருக்கத்திற்கு அப்பாற்பட்டவை. எங்கள் உறவு நாகரீக ரீதியில் பிணைந்துள்ளதோடு அது பரஸ்பர மரியாதை, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு செயற்பாடாக வரையறுக்கப்படுகிறது.

இந்து சமுத்திரக் கரையிலிருந்து உப கண்டத்தின் மையப்பகுதி வரை, நமது நாடுகளின் வலுவான உறவுகளில் உள்ளார்ந்த மரபுகள், மதிப்புகள் மற்றும் எதிர்காலத்திற்கான பார்வை ஆகியவற்றின் பொதுவான பாரம்பரியத்தால் நாம் பிணைக்கப்பட்டுள்ளோம். எனவே, எனது முதல் உத்தியோகபூர்வ அரச விஜயத்தை நான் இந்தியாவுக்கு மேற்கொண்டமை ஆச்சரியப்படும் விடயமல்ல.

இந்த பழமையான நட்பை மேலும் வலுப்படுத்த எனது நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது. பொருளாதார மீட்சி, அபிவிருத்தி மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கிய எனது நாட்டின் பயணத்தில், இந்தியா எமக்கு மேலான ஒத்துழைப்பை வழங்கும் நம்பகரமான நண்பராகவும், உறுதியான பங்காளியாகவும், நெருங்கிய அண்டை நாடாகவும் மாறியுள்ளது. தேவைப்படும் சமயங்களில் இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவையும் தளராத ஒத்துழைப்பையும் நான் மிகவும் பாராட்டுகிறேன்.

இலங்கை ஒரு புதிய சகாப்தத்தின் வாசலில் நிற்கும் வேளையில், அதன் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும், மக்களிடையேயான தொடர்புகளை மேம்படுத்துவதும், பிராந்திய மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை முன்னேற்றுவதும் மிக முக்கியமானது. எதிர்காலத்தில் மிகப்பெரிய சாத்தியங்கள் உள்ளன.

இந்து சமுத்திர பிராந்தியத்தின் அமைதி, ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதில் நமது இரு நாடுகளின் பங்கு மிகவும் முக்கியமானது.

எங்கள் கூட்டாண்மையின் பலம் கூட்டுச் செயற்பாட்டில் தங்கியுள்ளது. சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பது, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது அல்லது உலகளவில் அனைத்து குடிமக்களுக்கும் பயனளிக்கும் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்துவது எதுவாக இருந்தாலும், கூட்டு முயற்சிகள் மூலம் மட்டுமே எல்லைகளைத் தாண்டிய புதிய மற்றும் அதிகரிக்கும் சவால்களை எதிர்கொள்ள முடியும்.

எதிர்கால சந்ததிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மற்றும் ஒன்றுக்கொன்று சார்ந்திருக்கும் உலகின் அபிவிருத்திக்கு 21 ஆம் நூற்றாண்டின் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கு, உலகளாவிய தெற்கின் ஒரு தலைவராக இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பை பேண இலங்கை உறுதிபூண்டுள்ளது.

இந்த சந்தர்ப்பம், அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான முயற்சியில் நம்மை இணைவதற்கு எம்மை சமீபமாக்கும், காலத்தினால் அழியாமல் நீடிக்கும், எமது தேசங்கள் இரண்டுக்கும் இடையில் செழுமையடையும் நீண்டகால நட்பின் அனுட்டிப்பாக அமையட்டும் என்றும் நான் பிரார்த்திக்கிறேன்.

இந்திய அரசாங்கமும் மக்களும் எமக்கு வழங்கும் அசைக்க முடியாத ஆதரவு மற்றும் நட்புக்காக எனது கௌரவத்துடன் கூடிய நன்றியைத் தெரிவிக்கிறேன். எமது ஒத்துழைப்பு மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கும் அதேநேரம், நாம் ஒன்றாகச் செல்லும் பயணம் நமது நாடுகளை போலவே முழு பிராந்தியத்திற்கும் செழிப்பைக் கொண்டுவரும் என்று நான் நம்புகிறேன்.

Related posts

குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் பாராளுமன்றம் வரமாட்டேன் – நாமல் சவால் – வீடியோ

editor

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

editor

நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தை சுத்தம் செய்வதற்கான சிரமதான நாள் – ஜனாதிபதி அநுர

editor