அரசியல்உள்நாடு

இதுவா இளைஞர்கள் எதிர்பார்த்த மாற்றம் ? நிமல் லான்சா

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது குடும்ப ஆட்சி பற்றி பேசிய தேசிய மக்கள் சக்தியின் வேட்புமனு பெயர்பட்டியல்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இளைஞர் யுவதிகள் எதிர்பார்த்த மாற்றம் இதுவா என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா கேள்வியெழுப்பினார்.

நீர் கொழும்பிலுள்ள தேர்தல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய மக்கள் சக்திக்கே மக்கள் அதிகாரத்தை வழங்க வேண்டும். ஆனால் அதற்குரிய பலமான எதிர்க்கட்சி அவசியமாகும். மக்களிடம் கூறியவற்றைத் தேசிய மக்கள் சக்தி செய்யவில்லை.

முறைமையில் மாற்றம் வேண்டும் என்பதற்காக இளைஞர், யுவதிகள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த எந்தவொரு முறைமை மாற்றமும் இடம்பெறவில்லை.

அரச நியமனங்களும் தகுதியானவர்களுக்கு வழங்கப்படவில்லை. மாறாகத் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கே வழங்கப்படுகிறது.

இளைஞர்களுக்கு இடமளிப்பதாகக் கூறினார்கள். எந்தவொரு நியமனமும் இளைஞர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே பொதுத் தேர்தலின் போதாவது மக்கள் இது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

தேசிய மக்கள் சக்தி தமது தேர்தல் பிரசார மேடைகளில் குடும்ப ஆட்சி குறித்து பேசினர். ஆனால் தற்போது பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள எந்தவொரு எதிர்க்கட்சியிலும் குடும்ப அங்கத்தவர்கள் போட்டியிடவில்லை. ஆனால் தேசிய மக்கள் சக்தியின் வேட்புமனு பட்டியலில் குடும்ப அங்கத்தவர்கள் உள்ளனர். ஏனைய அரசியல் கட்சிகளுக்கும் அப்பால் சென்று இவர்கள் செயற்படுகின்றனர்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஜனாதிபதி என்பதால் அவருக்கு அதிகாரத்தை வழங்குங்கள். ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்க வேண்டாம்.

பாராளுமன்றத்தில் மக்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடிய பலமான எதிர்க்கட்சியை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். எமக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. ஆனால் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பாரிய முரண்பாடு காணப்படுகிறது என்றார்.

-எம்.மனோசித்ரா

Related posts

அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு

ஜனாதிபதி தேர்தல் – தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் அறிவிப்பு

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பாராளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை!