உள்நாடு

அரிசி இறக்குமதி வரியை குறைக்குமாறு வர்த்தகர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை

அரிசி இறக்குமதிக்கு சுங்கவரி விதித்துள்ள ஒரு கிலோவுக்கு 65 ரூபா வரியை குறைக்குமாறு பல பிரதேசங்களில் உள்ள வர்த்தகர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரி குறைக்கப்பட்டால் அரிசி கட்டுப்பாட்டு விலையினை தொடர்ந்து பேண முடியுமென வர்த்தகர்களைப் போன்றே நுகர்வோர் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

சுமார் 2 மாதங்களாக நிலவி வரும் அரிசி நெருக்கடிக்கு தீர்வாக கடந்த பருவத்தில் அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலைகளை விதிக்கவும், அரிசி ஆலைகளை நுகர்வோர் அதிகாரசபையினர் சோதனை செய்யவும், வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அரிசி இறக்குமதிக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 20 ஆம் திகதி வரை 67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

இதில் 38,500 மெற்றிக் தொன் நாட்டரிசி காணப்படுவதோடு, மீதமுள்ள 28,500 மெற்றிக் தொன் பச்சை அரிசியாகும்.

இந்த அரிசி இறக்குமதிக்காக ஒரு கிலோகிராம் ஒன்றுக்கு 65 ரூபா வீதம் 4.3 பில்லியன் ரூபாவை இறக்குமதி வரியாக இலங்கை சுங்கம் அறவீடு செய்துள்ளது.

இறக்குமதி அரிசி மொத்த சந்தைக்கு வந்ததன் பின்னர் நிலவிய அரிசி தட்டுப்பாடு ஓரளவுக்கு தணிந்துள்ள போதிலும், இன்னும் சந்தையில் போதியளவு அரிசி இல்லை என சில பிரதேசங்களில் இருந்து அறியமுடிகிறது.

எவ்வாறாயினும், ஏனைய பிரதேசங்களில் உள்ள வியாபாரிகள் தங்களிடம் சில உள்ளூர் அரிசி இருப்பதாகவும் ஆனால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி இல்லை என தெரிவிக்கின்றனர்.

Related posts

மேலும் 405 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

பெசில் ராஜபக்ஷ தலைமையில் பெரமுனவின் கட்சிக் கூட்டம் ஆரம்பம்

இலங்கை வரும் அனைத்து பயணிகளையும் தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை