உள்நாடு

அரசியல் பழிவாங்கலை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் – அப்துல்லாஹ் மஹ்ரூப்

(UTV| கொழும்பு) – அரசியல் பழிவாங்கல் கைதுகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டுமெனத் தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், இவ்வாறான கைது முயற்சிகள், இணக்கப்பாட்டு அரசியலில் அரசாங்கத்திற்கு நாட்டமில்லை என்பதையே வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில், இன்று (16) ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட, ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் அதுல்லாஹ் மஹ்ரூப், மேலும் கூறியதாவது,

“சமூகம்சார் அரசியல் நலன்களை முன்னெடுக்கும் சிறுபான்மைத் தலைவர்களை, ராஜபக்ஷக்களின் அரசாங்கம் நெருக்குதலுக்குள்ளாக்கி வருகின்றமை கவலையளிக்கிறது. விசாரணை, கைது, பிடிவிறாந்து, வாக்குமூலமென எமது கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனையும் இந்த அரசாங்கம் தொல்லைப்படுத்துகிறது.

தங்களின் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்காத, எமது தலைவரை அச்சுறுத்துவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும். பொறுப்புமிக்க ஒரு அரசியல் தலைவரைத் தொடர்ந்து கெடுபிடிக்குள்ளாக்குவது, அவரை நம்பியுள்ள சமூகத்தின் மீதான அச்சுறுத்தல், அடக்குமுறைகளாகவே நாம் பார்க்கிறோம். ஆதாரங்களின்றியும், அத்துமீறியும் எமது தலைவருக்கு கொடுக்கப்படும் தொடர் அழுத்தங்களால், இந்த அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை எமது மக்கள் இழந்து வருகின்றனர்.

எனவே, அரசியல் காரணங்களுக்காக இட்டுக்கட்டப்படும் குற்றச்சாட்டுக்களை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம். எமது தலைவர் மீது சந்தேகங்கள் இருப்பின், அதுபற்றி விசாரிக்க உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுவது அவசியம். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை, மக்கள் அங்கீகாரமுள்ள தலைவரை எவ்வாறு அணுக வேண்டுமென்ற நியதிகளைப் பின்பற்றாது, பழிவாங்குவதற்காகவே எமது தலைவர் மீது பாய்ச்சல் நடத்தப்படுகிறது.

அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், ஊழல் செய்ததாகப் பலமுறை விசாரணை நடத்தியும், இவர்களால் எதையும் நிரூபிக்க முடியாமல் போய்விட்டது. இருந்தும், தொடர்ந்தும் அடக்கு முறைக்குள் எமது தலைவரை வைக்கும் நோக்கிலே, இந்த அரசாங்கம் செயற்படுகிறது”. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

-ஊடகப்பிரிவு –

Related posts

உலகின் மிக வேகமாக பரவும் கொவிட் மாறுபாடு இலங்கையிலும்

பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்க நடவடிக்கை

பரோட்டா மற்றும் வடை ஆகியவற்றின் விலைகள் கணிசமாக உயர்வு