சூடான செய்திகள் 1

“அரசியல் அந்தஸ்தைப் பெற்று வாளாவிருந்தவர்களை அபிவிருத்தியின்பால் திரும்ப வைத்துள்ளோம்” – நிந்தவூரில் அமைச்சர் ரிஷாட்!

(UTV|COLOMBO)-அம்பாறை மாவட்ட மக்களின் வாக்குகளைப் பெற்று நீண்டகாலமாக அரசியல் செய்து, அரசியல் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டவர்கள், அந்த மக்களை திரும்பிக்கூட பார்க்காமலும், அவர்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பற்றி சிந்திக்காமலும் இருந்து வருகின்றனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பிராந்தியக் காரியாலயத்தை நேற்று(30) நிந்தவூரில் திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நீண்டகாலமாக இப்பிராந்தியத்தில் மிக இலகுவாக வாக்குகளைப் பெற்று, அரசியல் அந்தஸ்தையும் அடைந்து, மக்களை மறந்து செயற்பட்டவர்களை இன்று நாம் மக்களின் பக்கம் திரும்பிப் பார்க்கச்செய்து உற்சாகப்படுத்தியுள்ளோம். இதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட வருகையுடன், அண்மைக்கால தேர்தல்களில் மக்கள் வழங்கி வரும் பேராதரவுமே முக்கிய காரணமாக அமைந்தது.

இன்று மிக மோசமாக விமர்சிக்கப்படும் ஒரு கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இருந்து வருகின்ற போதிலும், மிகப்பொறுமையாகவும், நிதானமாகவும் மக்களுடைய நலனை மையமாக வைத்து இக்கட்சி பயணித்துக் கொண்டிருக்கின்றது.

எதிர்க்கட்சி அரசியல் செய்வதற்கு அன்று தயங்கியவர்கள், இன்று எதிர்க்கட்சி அரசியல் செய்யப் போவதாக தம்பட்டம் அடிக்கின்றனர். அன்று அரசியலில் பலமாக நாம் இருந்த போதும், எதிர்க்கட்சி அரசியல் நடாத்துவதற்கு தயார் என்று அமைச்சுப் பதவிகளை எல்லாம் தூக்கி எறிந்து சென்றவர்கள் நாங்கள்.

இன்று சமூகம் பல சவால்களை எதிர்நோக்கியுள்ள ஒரு காலத்தில் நாம் இருந்துகொண்டிருக்கின்றோம். புத்திசாதுர்யமாக எங்களுடைய எதிர்காலத்தை திட்டமிட வேண்டிய தார்மீகப் பொறுப்பும் நமக்கிருக்கினறது. அந்த வகையில் கல்விமான்கள், சிவில் அமைப்புக்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், உலமாக்கள் என அத்தனைபேரும் ஒன்றுபட்டு, ஓர் அரசியல் பாதையிலே சமூகப் பயணமாக பயணிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு எமக்கிருக்கின்றது.

இன்று ஒலுவில் மக்கள் தமது நிலத்தை பாதுகாக்குமாறு போராடுகிறார்கள். மறுபக்கம் மீனவர் சமூகம் தமது தொழில் துறையை பாதுகாக்குமாறும், தங்களுக்கான வாழ்வாதாரத்தை உறுதி செய்யுமாறும் போராடி வருகின்றார்கள். இவர்களுக்கான தீர்வை இது வரைக்கும் இங்குள்ள அரசியல் தலைமைகள் வழங்காமல் இருந்து வருவது கவலைக்குரியதாகும்.

அம்பாறை மாவட்ட மக்களின் நலனுக்காக இந்த பணிமனை சிறந்த சேவையினை வழங்கவுள்ளது. குறுகியதொரு காலப்பகுதியினுள் அம்பாறை மாவட்ட மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மீது நம்பிக்கை வைத்து, கடந்த தேர்தலில் எமக்கு வாக்களித்தமையினை என்றும் நாம் மறந்து விட முடியாது. அவர்களை நாங்கள் என்றும் நன்றி உணர்வோடு பார்க்கின்றோம் என்றார்.

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.தாஹீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதி அமைச்சர் அமீர் அலி, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றூப், கட்சியின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

-ரீ.கே.றஹ்மத்துல்லா-

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சூடுபிடிக்கும் கல்முனை பிரதேச செயலக விவகாரம் : ஜூன் 07 நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது வழக்கு

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை

உலக சுகாதார அமைப்பு இலங்கைக்குப் பாராட்டு