சபையில் தொடர்ந்தும் அமைதியற்ற முறையில் நடந்துகொள்ளும் யாழ். மாவட்ட எம். பி அர்ச்சுனா இராமநாதனை படைக்கல சேவிதர்களைக் கொண்டு சபையிலிருந்து வெளியேற்ற நேரிடும் என பிரதி சபாநாயகர் மொஹமட் ரிஷ்வி சாலி இன்று (06) சபையில் கடுமையாக எச்சரித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமரிடத்தில் கேள்வியெழுப்பிய சந்தர்ப்பத்தில் சபாபீடத்தை அவமதிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் வசனமொன்றை வெளியிட்டதாக ஏற்பட்ட சர்ச்சையின் போது அர்ச்சுனா எம்.பி அமைதியற்ற முறையில் நடந்துகொண்டமையினால் சபாநாயகர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.
எதிர்க்கட்சித் தலைவரின் குறிப்பிட்ட கருத்தொன்று தொடர்பில் பிரதிசபாநாயகர் தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் போது, நேற்று (05) பாராளுமன்றத்தில் அர்ச்சுனா எம்.பியினால் சபாநாயகரை பார்த்து வெட்கம் என்று கூறிய வசனத்தை சுட்டிக்காட்டியும் கருத்தை வெளியிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் சபாபீடத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார். அதேபோன்று நேற்று எம்.பியொருவர் இந்த ஆசனத்தை பார்த்து ‘ஷேம்’ என்று கூறி அவமதித்துள்ளார். நான் அவ்வேளையில் இந்த சபையில் இருந்திருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
அவ்வேளையில் அர்ச்சுனா எம்.பி அது தொடர்பில் ஏதோ கருத்தொன்றை தெரிவிக்க முயன்றதுடன், அமைதியற்ற முறையிலும் நடந்துகொண்டார்.
இதன்போது ஆசனத்தில் அமருமாறும், சபையின் ஒழுக்கத்தை பேணுமாறும் பிரதி சபாநாயகர் அவரைக் கேட்டுக்கொண்டார்.
ஆனால் தொடர்ந்தும் அர்ச்சுனா எம்.பி அமைதியற்ற முறையில் நடந்துகொண்ட நிலையில், நீங்கள் ஆசனத்தில் அமராவிட்டால் படைக்கல சேவிதர்களை கொண்டு சபையிலிருந்து வெளியேற்ற நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். அதன் பின்னரே அர்ச்சுனா எம்.பி அமைதி காத்தார்.