பிறப்புரிமை அடிப்படையில் இனி தானாக அமெரிக்க குடியுரிமையை கோர முடியாது என புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவரின் இந்த அறிவிப்பு அமெரிக்காவில் தற்காலிகமாக தங்கி வேலை செய்யும் இந்தியர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட ட்ரம்ப், எரிசக்தி பயன்பாடு, குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம் என பல்வேறு தடாலடியான அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில் முக்கியமாக, பிறப்புரிமை அடிப்படையில் இனி தானாக குடியுரிமை பெறும் நடைமுறையை ரத்து செய்வதாக ட்;ரம்ப் அறிவித்தார். இது, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
ட்ரம்ப்பின் இந்த முடிவு இந்தியர்களிடையே பெரிதும் பாதிப்பை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.
ஏனெனில், இலட்சக்கணக்கான இந்தியர்கள் தற்காலிக விசா அடிப்படையில் அமெரிக்காவில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்கள் அங்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலையில், பெற்றோரின் குடியுரிமை அல்லது குடியேற்ற நிலை ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் அந்த குழந்தைகளுக்கு தானாக அமெரிக்க குடியுரிமை வழங்கும் சட்ட நடைமுறை இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அந்த கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இனி அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் எவரும் அமெரிக்க குடியுரிமையை கோரமுடியாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இந்த புதிய உத்தரவு 30 நாட்களில் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், குடியேற்ற கொள்கை தொடர்பான ட்ரம்ப்பின் இந்த உத்தரவுக்கு எதிராக சட்டப்போராட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை கோருவதை முடிவுக்கு கொண்டு வரும் நிர்வாக ரீதியிலான உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்ட சில மணி நேரங்களுக்குள்ளாகவே அதனை எதிர்த்து நியூ ஹாம்சையரில் உள்ள குடியேற்ற வழக்கறிஞர்கள் வழக்கை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.