அரசியல்உள்நாடு

அநுரவை வெல்லச்செய்வதற்கான போலி வேட்பாளராகவே ரணில் செயற்படுகிறார் – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறங்கவில்லை எனவும், மாறாக அநுரகுமார திஸாநாயக்கவை வெல்லச்செய்வதற்கான ‘ஒப்பந்த’ அடிப்படையிலான போலி வேட்பாளராகவே அவர் களமிறங்கியிருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் பிரசார மேடையொன்றில் சஜித் பிரேமதாஸவினால் அநுரகுமார திஸாநாயக்கவைத் தோற்கடிக்கமுடியாது என்று கூறுகின்றார்.

இதனூடாக எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தான் வெல்லப்போவதில்லை என்பதை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

அதேபோன்று ரணில் விக்ரமசிங்க இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் வெல்லும் நோக்கில் களமிறங்கவில்லை என்று நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். ஏனெனில் அவர் வெல்வதை விடவும், சஜித் பிரேமதாஸவைத் தோற்கடிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளையே முன்னெடுத்துவருகின்றார்.

ஆகையினால் சஜித் பிரேமதாஸவினால் அநுரகுமார திஸாநாயக்கவைத் தோற்கடிக்கமுடியாது என்று கூறுவதன் ஊடாக சஜித்தின் வெற்றிக்காகப் பணியாற்றுவோரை உளவியல் ரீதியில் சோர்வடையச்செய்வதற்கே அவர் முற்படுகின்றார்.

ஜனாதிபதித்தேர்தல்களில் ‘ஒப்பந்த’ அடிப்படையில் செயற்படும் போலி வேட்பாளர்கள் பலர் களமிறங்குவார்கள்.

அடுத்த வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு ஏதுவான பாதையை உருவாக்கிக்கொடுப்பதே அந்த போலி வேட்பாளர்களின் பணியாக இருக்கும். அவ்வாறு தான் இம்முறை ரணில் விக்ரமசிங்க செயற்படுகின்றார்.

அவர் அநுரகுமார திஸாநாயக்க வெல்வதற்கு அவசியமான ஆதரவை வழங்குவதற்காகவே தேர்தலில் களமிறங்கியிருக்கின்றார். ரணில் விக்ரமசிங்க மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகிய இருவரும் பிரதானமாக சஜித் பிரேமதாஸவையே தாக்கிப்பேசுகின்றனர்.

அதேபோன்று தபால்மூல வாக்களிப்பு தினத்துக்கு முன்னைய தினம் இரவு அரசுக்குச் சொந்தமான தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் நடைபெற்ற ஒரு மணிநேர நிகழ்ச்சியில் அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்டார்.

உண்மையில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவது சாத்தியமா? எனவே அநுரகுமார திஸாநாயக்க வெல்வதற்கு அவசியமான பின்னணி, வசதி வாய்ப்புக்கள் அனைத்தையும் ரணில் விக்ரமசிங்க பெற்றுக்கொடுப்பதையே இது காண்பிக்கின்றது.

அடுத்த சில வாரங்களில் ரணில் அநுரவையோ, அநுர ரணிலையோ சாடிப்பேசமாட்டார்கள். மாறாக இருவரும் இணைந்து சஜித் பிரேமதாஸவைத் தூற்றுவார்கள்.

அடுத்தாக வடக்கில் மக்கள் முன்பு உரையாற்றுகின்ற அநுரகுமார திஸாநாயக்க, ‘தெற்கில் மக்கள் விரும்பும் மாற்றத்துக்கு எதிராக நின்றதாக நீங்கள் அடையாளப்படுத்தப்படுவதை விரும்புகின்றீர்களா?’ எனக் கேட்கின்றார்.

அதாவது அவர்களுக்கு (தேசிய மக்கள் சக்திக்கு) ஆதரவான நிலைப்பாட்டை தமிழ் மக்கள் எதிர்க்கக்கூடாது என்ற எச்சரிக்கையே அதுவாகும்.

அதுமாத்திரமன்றி சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி மேற்கொண்ட தீர்மானத்தையும் அவர் கேள்விக்கு உட்படுத்துகின்றார்.

இவ்வாறான அச்சுறுத்தல்கள் ஜனநாயகத்துக்கு முற்றிலும் விரோதமானவையாகும். ஆகையினாலேயே மக்கள் விடுதலை முன்னணி இன்னமும் மாற்றமடையவில்லை என்று நாம் தொடர்ச்சியாகக் கூறிவருகின்றோம். எனவே இதுகுறித்து நாட்டுமக்கள் விழிப்புடன் செயற்படவேண்டியது அவசியமாகும் என்றார்.

-நா.தனுஜா 

Related posts

‘நாட்டு மக்களின் விருப்பு வெறுப்புக்களை அறிந்த ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்’

இருபது : சர்வஜன வாக்கெடுப்புத் திருத்தங்கள் உள்ளடக்கப்பட மாட்டாது

ரஞ்சன் தொடர்பில் CID பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் உத்தரவு