உள்நாடு

அத்துருகிரிய துப்பாக்கிச் சூடு – 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு

அதுருகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 05 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வாக்குமூலங்களை அதுருகிரிய பொலிஸார் பதிவு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற அத்துரிகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் நிலைய உரிமையாளர் உட்பட 05 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதுருகிரிய பிரதேசத்தில் நேற்று (08) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் “கிளப் வசந்த” என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாடகி கே. சுஜீவா உட்பட நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

காலில் தோட்டா தாக்கியதில் பலத்த காயங்களுக்கு உள்ளான கே.சுஜீவாவுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொலை செய்யப்பட்ட கிளப் வசந்தவின் மனைவி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தப்பிச் சென்ற வேனை புலத்சிங்கள பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

புலத்சிங்கள, தெல்மெல்ல பிரதேசத்தில் உள்ள பாழடைந்த இடமொன்றில்  இருந்து குறித்த வேன் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டிற்காக சந்தேகநபர்கள் வந்த காரும் கடுவெல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் பல நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 403 பேர் கைது

அவசரகால ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

ஜனாதிபதி – இந்திய பிரதமர் இடையே சந்திப்பு