விளையாட்டு

IPL 2021 போட்டிகள் அக்டோபரில்

(UTV | சென்னை) –  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பர் 19 இல் தொடங்கி அக்டோபர் 15 இல் முடிவடையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் 2021 போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 52 நாள்களுக்கு நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் போட்டியில் 60 ஆட்டங்கள் இடம்பெற இருந்தன. ஆனால் 24 நாள்களில் 29 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றன.

ஐபிஎல் 2021 போட்டியின் மீதமுள்ள ஆட்டங்கள், செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பர் 19 அன்று தொடங்கவுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இறுதி ஆட்டம் அக்டோபர் 15 இல் நடைபெறவுள்ளதாகவும் தெரிகிறது. இந்தப் போட்டியில் முக்கியமான வெளிநாட்டு வீரர்கள் கலந்துகொள்வதற்காக வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்களிடம் பிசிசிஐ பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில்…

நாணய சுழற்சியில் நியூஸிலாந்து அணி வெற்றி

இலங்கை மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் போட்டி ​வெற்றி தோல்வியின்றி நிறைவு