அரசியல்உள்நாடு

IMF உடன் செய்துள்ள ஒப்பந்தங்கள் மீறப்பட்டால் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைக்க முடியாது – ஜனாதிபதி ரணில்

கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட ‘The Mall’ வரியில்லா வர்த்தக தொகுதியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (05) பிற்பகல் திறந்து வைத்தார்.

இந்த வர்த்தகத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டிருக்கும் வரியில்லா வர்த்தக தொகுதி, விற்பனை நிலையங்கள், உணவகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. 

இதற்குள் One World, China Duty Free Group (CDFG) மற்றும் Flemingo ஆகியவை இந்த வர்த்தகத் தொகுதியில் தங்கள் செயல்பாடுகளைத் ஆரம்பித்திருப்பதன் மூலம், கொழும்பு துறைமுக நகரம், பிராந்தியத்தில் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகத் தொகுதியாக பரிணமிக்கும். 

பெயர் பலகையை திரைநீக்கம் செய்து, வணிக வளாகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, கண்காணிப்பு பயணத்தையும் மேற்கொண்டார்.

துறைமுக நகரை இவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும் என இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாரும் எதிர்பார்க்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் அரசாங்கம் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியமையினால் இன்று துறைமுக நகரின் நிதிச் செயற்பாடுகளை தொடங்க முடிந்துள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

சுமார் 100 நிறுவனங்கள் துறைமுக நகரம் குறித்து கவனம் செலுத்தியுள்ளன. அவற்றில் 74 நிறுவனங்கள் இந்த வருட இறுதிக்குள் துறைமுக நகரத்தில் முதலீடு செய்ய உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

வெளிநாட்டு கடன் வழங்குனர்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் திருத்தமின்றி அமுல்படுத்தப்பட்டால் நாட்டுக்கு சிறந்த எதிர்காலம் கிடைக்கும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

இன்று துறைமுக நகரத்தில் இந்த வரியில்லா வர்த்தக தொகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளமை மிக முக்கியமானதாகும். இலங்கையின் சுற்றுலா துறை உலக அளவில் பிரசித்தம் பெற்றுள்ளது. இந்த வர்த்தகக் கட்டிட தொகுதி இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவார்கள்.

அவர்களுக்குத் தேவையான பொருட்கள் கிடைக்கும் வகையில் வணிக வளாகங்களை நிர்மாணித்து இந்த துறைமுக நகரத்தை மேம்படுத்தியுள்ளோம். இது துறைமுக நகரத்தின் ஆரம்பமாக மட்டுமே அமையும்.

துறைமுக நகரை இவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கை இரண்டு வருடங்களுக்கு முன்னர் எமக்கு இருக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியதன் காரணமாகவே இன்று இப்பணியை செய்ய முடிந்துள்ளது. 

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் கடன் வழங்கிய 18 நாடுகளுடன் இந்த வேலைத்திட்டத்தை தொடர்வதற்கு நாம் உடன்படிக்கை செய்துள்ளோம். அந்த ஒப்பந்தங்களை மாற்றாமல் தொடர்ச்சியாக கொண்டுச் சென்றால் இலங்கைக்கு நல்ல எதிர்காலம் கிட்டும். அந்த உடன்படிக்கைகளில் திருத்தம் செய்ய முற்பட்டால், எதிர்காலம் கேள்விக்குறியாகும். 

குறிப்பாக 100 நிறுவனங்கள் இன்று துறைமுக நகரம் குறித்து கவனம் செலுத்தியுள்ளன. அதில் 74 நிறுவனங்கள் இந்த வருட இறுதிக்குள் இலங்கையில் முதலீடு செய்யவுள்ளன. மேலும், கொழும்பு கோட்டையில் புதிய சுற்றுலா வலயத்தை ஆரம்பிக்க உள்ளோம். இதனால், இப்பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பொலிஸ் தலைமையகம் இடம் மாற்றப்பட்டுள்ளது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சும் புதிய கட்டிடத்திற்கு மாறுகிறது. குடியரசு சதுகத்தையும் புதுப்பித்து, அந்தப் பகுதியை சுற்றுலா வலயமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் பழைய தபால் நிலைய கட்டிடத்தை சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு பயன்படுத்த முடியும். பழைய துறைமுகம் மற்றும் அதன் இறங்குதுறை மற்றும் பழைய சுங்க கட்டிடம் உள்ளிட்ட அனைத்தையும் சுற்றுலா அபிவிருத்திக்கு பயன்படுத்த முடியும்.

கடற்படைத் தலைமையகம் தற்போது அக்குரேகொடைக்கு மாற்றப்பட்டுள்ளதால், பழைய இடத்தில் புதிய ஹோட்டல்களை அமைக்கலாம். தற்போதுள்ள ஜனாதிபதி மாளிகை சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி விரிவான சுற்றுலாத்துறையை உருவாக்க திட்டமிட்டிருக்கிறோம்.

இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய சுற்றுலா பயணிகளை அதிக அளவில் அழைத்து வர வேண்டும். அதன் மூலம் ஈட்டும் வருமானத்தையும் அதிகரிக்க வேண்டும்.

இரண்டு வருடங்களில் இப்படியொரு வணிக வளாகத்தை ஆரம்பிக்க முடிந்ததற்கு பெருமைப்பட வேண்டும். 7000 சதுர மீட்டருக்குள் 03 உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன. இன்னும் பல நிறுவனங்கள் வர காத்திருக்கின்றன. நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாத்து முன்னேறி இந்த துறைமுக நகரை உலகப்புகழ் பெற்ற மையமாக மாற்றுவோம்.

முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம

நகர மையத்தில் முதன்முறையாக நிர்மாணிக்கப்பட்ட வரியில்லா வர்த்தக வளாகத்தை திறந்துவைத்தமை அனைவருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணமாகும். இதை நனவாக்கிய அனைவருக்கும் எனது நன்றிகள்.

தற்போதுள்ள சட்ட வரையறைகளுக்குள் செயற்படுவது மிகச் சவாலாக இருந்தது. அதுகுறித்து ஜனாதிபதியும், இதன் தலைவரும் அறிவார்கள். பழைய சட்டதிட்டங்களுக்கு அமைய இந்தச் செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கிறோம். 

நாம் தற்போது புதிய அத்தியாத்திற்குள் நுழைந்திருக்கிறோம். கொழும்பு துறைமுக நகரம் தொடர்பிலான சகல வங்கி சட்டங்களும் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. அதன்படி கொழும்பு துறைமுக நகரம் முழுமையாக வர்த்தகச் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. 

நெருக்கடிகளுக்கு மத்தியில் முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய காலப்பகுதியில் இவ்வாறானதொரு கட்டிடத்தொகுதியை திறந்து வைப்பதற்கான சூழலை உருவாக்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர் பந்துல குணவர்தன, இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் மற்றும் உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் எம். எம். நைமுதீன், சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சாங் குய்பென்ங் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related posts

பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு!

“உள்ளூராட்சித் தேர்தல் சரியான நேரத்தில் இடம்பெறும்”

கட்டுப்பாட்டு விலையில் தேங்காய் எண்ணெய்