விளையாட்டு

FIFA 2018 வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்த பிரான்ஸ்

(UTV|RUSSIA)-21ஆவது உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் குரோஷியாவை வீழ்த்தி பிரான்ஸ் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்தி உள்ளது.

பிரான்ஸ்-குரோஷியா அணிகள் இடையிலான போட்டி மாஸ்கோ லுஷ்னிக் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு  நடைபெற்றது.
கடந்த ஜூன் மாதம் 14-ஆம் திகதி 21ஆவது உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் தொடங்கின. மொத்தம் 32 அணிகள் பங்கேற்றன. இப்போட்டித்தொடரில் முதல் சுற்று போட்டிகளில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 16 அணிகள் வெளியேறின.
ரவுண்ட் 16 எனப்படும் நொக் அவுட் சுற்று ஆட்டங்களில் ஜாம்பவான் ஆர்ஜென்டீனா, போர்த்துக்கல் உள்ளிட்டவையும், காலிறுதி ஆட்டங்களில் முன்னாள் சாம்பியன்கள் பிரேஸில், உருகுவே, ஸ்பெயின் உள்ளிட்டவையும் வெளியேறின.
பிரான்ஸ்-குரோஷிய ஏற்கெனவே 5 முறை மோதியதில் பிரான்ஸ் மூன்று போட்டிகளில் வெற்றிப்பெற்றது. இரு ஆட்டங்கள் வெற்றிதோல்வியின்றி முடிந்தன.
இந்நிலையில் பிரான்ஸ்-குரோஷிய அணிகளின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இந்த 21ஆவது உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் இரு அணிகளும் ஒரு ஆட்டத்தில் கூட தோற்கவில்லை. 1998-இல் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ், 2006-இல் இறுதிக்கு முன்னேறியது. தற்போது மூன்றாவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது.
1998-இல் மூன்றாம் இடம் பெற்ற குரோஷிய அணி 20 ஆண்டுகள் கழித்து முதன்முறையாக இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. 2-வது முறையாக பட்டம் வெல்ல பிரான்ஸ்சும் முதன்முறையாக பட்டம் வெல்ல குரோஷியாவும் முனைப்புடன் இருந்த நிலையில் ஆட்டம் தொடங்கியதுமே இரு அணிகளின் வீரர்களும் ஆதிக்கம் செலுத்த தலைப்பட்டனர்.
குரோஷியா சேம்சைட் கோல்: 18-ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் பார்வர்ட் கிரைஸ்மேன் ஃப்ரீ கிக் வாய்ப்பு மூலம் அடித்த பந்தை குரோஷிய வீரர் மரியோ மண்ட்ஸகிக் தனது தலையால் தடுக்க முயன்ற போது, சேம் சைட் கோலானது. இதன் மூலம் பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றது. பின்னர் குரோஷிய அணியின் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியதால் 28-ஆவது நிமிடத்தில் அதன் வீரர் விடா கடத்தி அனுப்பிய பந்தை இவான் பெரிஸிக் அற்புதமாக கோலாக்கினார்.
இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 38-ஆவது நிமிடத்தில் குரோஷிய வீரர் புரிந்த தவறால் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை பிசகின்றி கோலாக்கினார் பிரான்ஸ் வீரர் கிரைஸ்மேன்.
இதனால் முதல் பாதி ஆட்ட நிறைவில் 2-1 என பிரான்ஸ் முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில் குரோஷிய வீரர்களின் ஆட்டம் சோபிக்கவில்லை. பிரான்ஸ் அணி வீரர்கள் தங்கள் ஆதிக்கத்தை பலப்படுத்தியதன் விளைவாக 59-ஆவது நிமிடத்தில் அதன் மிட்பீல்டர் போக்பா கோலடித்தார்.
அதன் தொடர்ச்சியாக 65-ஆவது நிமிடத்தில் ஹெர்ணான்டெஸ் அனுப்பிய பந்தை இளம் வீரர் மாப்பே 25 அடிகள் தூரத்தில் இருந்து அற்புதமாக கோலாக்கினார். 68-ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் கோல்கீப்பர் லோரிஸ் வசம் இருந்த பந்தை பறித்து குரோஷிய பார்வர்ட் மரியோ மண்ட்ஸ்கிக் கோலாக்கினார்.
பின்னர் குரோஷிய வீரர்கள் கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்று பிரான்ஸ் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இதன் மூலம் பிரான்ஸ் அணிக்கு  பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
இரண்டாம் இடம் பெற்ற குரோஷிய அணிக்கு  பரிசளிக்கப்பட்டது.
சிறந்த வீரருக்கான தங்க கால்பந்து விருது குரோஷிய வீரர் லுகா மொட்ரிக்குக்கும், சிறந்த இளம் வீரருக்கான விருது பிரான்ஸின் மாப்பேவுக்கும், அதிக கோலடித்த வீரருக்கான விருது இங்கிலாந்தின் ஹாரி கேனுக்கும், சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கையுறை விருது பெல்ஜியத்தின் கோர்டியாஸ்க்கும், ஃபேர் பிளே விருது ஸ்பெயின் அணிக்கும் வழங்கப்பட்டது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

சர்வதேச விண்வெளி மையத்தில் இடம்பெற்ற பெட்மின்டன் போட்டி

இறுதிப்போட்டிக்காக சென்னை-ஐதராபாத் அணிகள் மோதல்

எதிர்வரும் 15 இலங்கை – பங்களாதேஷ் ரி-ருவென்டி கிரிக்கெட் போட்டி