வணிகம்

COVID-19 நிவாரண செயற்பாடுகளுக்கு INSEE சங்ஸ்தா சீமெந்து பங்களிப்பு

(UTV | கொழும்பு) –நாட்டின் முன்னணி சீமெந்து விநியோகத்தரான INSEE சீமெந்து ஸ்ரீ லங்கா, COVID-19 பரவலை கட்டுப்படுத்தி, உறுதியான தேசத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை வழங்கி வருகின்றது. இலங்கையர்களின் நன்மதிப்பைப் பெற்ற சீமெந்து வர்த்தக நாமமான INSEE சங்ஸ்தா சீமெந்து, புத்தளம், இரனவில பகுதியில் Covid-19 கண்காணிப்பு நிலையத்தின் நிர்மாண பணிகளுக்கு அவசியமான சீமெந்தை விநியோகித்திருந்தது.

Covid-19 தொற்றுள்ளதாக சந்தேகிக்கப்படும் நோயாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்கும் பிரதான வைத்தியசாலைகளின் வளங்களை அதிகரிக்கும் வகையில் இந்த நிலையம் நிர்மாணிக்கப்படுகின்றது. மேலும், Covid-19 தொற்றாளர்களுக்கு சிகிச்சைகளை மேற்கொள்ளும் தேசிய தொற்றுநோய் நிறுவனத்தில் (IDH) அத்தியாவசிய தேவையாக காணப்பட்ட CT ஸ்கான் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் சம்மேளனத்துக்கு அவசியமான சங்ஸ்தா சீமெந்தையும் INSEE சீமெந்து ஸ்ரீ லங்கா நன்கொடையளிப்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, சிகிச்சை வழங்கும் போது காணப்படுகின்ற பிரதான சவால்களில் ஒன்றான, முகக்கசவங்கள் போன்ற பிரத்தியேக பாதுகாப்பு சாதனங்களின் பற்றாக்குறையை கவனத்தில் கொண்டு, INSEE நிறுவனம் 12,000 முகக் கவசங்களையும் அத்தியாவசிய காகிதாதிகளையும் Covid-19 பரவலை கட்டுப்படுத்துவதில் முன்னின்று செயலாற்றுவோருக்கு வழங்கியிருந்தது. இலங்கையின் மக்கள் மற்றும் தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய தினசரி பணியாற்றும் இலங்கை காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு இவை வழங்கப்பட்டிருந்தன.

INSEE சீமெந்து ஸ்ரீ லங்காவின் தவிசாளரும் / பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நந்தன ஏக்கநாயக்க கருத்துத் தெரிவிக்கையில்,

“இந்த வைரஸ் தொற்று உலகளாவிய ரீதியில் பாரிய பிரச்சனையாக எழுந்துள்ள நிலையில், உள்நாட்டில் இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், இதற்கு ஒவ்வொரு குடிமகனின் உதவியும் தேவையாகும். ஒரு பொறுப்பு வாய்ந்த நிறுவனமாய், எமது வளங்களை இந்த செயற்பாட்டுக்கு வழங்குவதன் முக்கியத்துவத்தை நாம் அறிந்துள்ளதுடன், தேவைகளை கொண்டுள்ளவர்களுக்கு எமது நிபுணத்துவம் மற்றும் ஆற்றலை பயன்படுத்தி உதவிகளை வழங்கி வருகின்றோம். எமது தேசத்தின் சுகாதாரம், நலன் மற்றும் சுபீட்சம் ஆகியன முக்கியத்துவம் வாய்ந்ததுடன், உறுதியான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பு வழங்க நாம் எம்மை தொடர்ந்தும் அர்ப்பணித்துள்ளோம்” என்றார்.

முழுத் தேசத்தையும் கொரோனாவைரஸ் தொற்றின் தாக்கம் பாதித்துள்ள நிலையில், இந்த இடர் நிலையின் பாரத்தூரத் தன்மையை INSEE சீமெந்து ஸ்ரீ லங்கா உணர்ந்து, தினசரி சம்பளம் பெறுவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தொடர்பில் தனது கவனத்தை செலுத்தியிருந்தது. காலி, புத்தளம் ஆகிய பிரதேசங்களில் பின்தங்கிய நிலையில் காணப்படும் வருமானமற்ற குடும்பங்களுக்கு INSEE மேலதிக உதவிகளை வழங்கிய வண்ணமுள்ளது. இதுவரை INSEE புத்தளம் சீமெந்து ஆலை நிர்வாகம் மற்றும் கூட்டாண்மை சமூக பொறுப்பு செயற்பாடுகள் அணியினர் நூற்றுக் கணக்கான குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருள்களை விநியோகித்திருந்தது. புத்தளம் பிரதேச செயலகம், கிராம சேவகர், INSEE புத்தளம் சமூக ஆலோசனை குழு பிரதிநிதிகள் போன்றவர்களால் இந்த குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன.

மேலும், INSEE றுகுணு சீமெந்து ஆலை ஊழியர்கள், தன்னார்வத்துடன் உதவ முன்வந்த முன்னாள் INSEE ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தார், நண்பர்கள் ஆகியோர் தன்னார்வ அடிப்படையில் இணைந்து நிதி திரட்டி, காலி பிரதேசத்தில் 140க்கும் அதிகமான தினசரி வருமானமீட்டும் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகித்து உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்த தருணத்தில் சங்ஸ்தா சீமெந்து வர்த்தக நாமத்தின் ஈடுபாடு தொடர்பில் INSEE சீமெந்து ஸ்ரீ லங்காவின் சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் புத்தாக்க செயற்பாடுகளுக்கான நிறைவேற்று உப தலைவர் யான் கூனிக் கருத்துத் தெரிவிக்கையில்,

“இலங்கையர்களுக்காக இலங்கையில் உருவாக்கப்படும் வர்த்தக நாமமான சங்ஸ்தா சீமெந்து, நாட்டின் பொறுப்பு வாய்ந்த சீமெந்து வர்த்தக நாமம் எனும் வகையில், தற்போதைய அத்தியாவசிய தேவையாக அமைந்துள்ள சுகாதாரபராமரிப்பு நிர்வாக நிலையங்களை நிறுவுவதில் பங்களிப்பு வழங்கியுள்ளது. இதனூடாக Covid-19 தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் முன்னின்று செயலாற்றும் சுகாதாரபராமரிப்பு, இராணுவ மற்றும் இலங்கை காவல்துறையினரின் அளப்பரிய செயற்பாடுகளுக்கு எம்மால் பங்களிப்பு வழங்க முடிந்தமை, குறிப்பிடத்தக்கது. ”உறுதியான எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம்” எனும் INSEE சீமெந்து நிறுவனத்தின் உறுதிமொழிக்கிணங்க நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் ஈடுபடுவோம்” என்றார்.

Related posts

கொழும்பு துறைமுகத்தை ஸ்மார்ட் துறைமுகமாக மாற்றியமைக்க நடவடிக்கை

எரிவாயு தட்டுப்பாடு : நுகர்வோருக்கு தீர்வு வழங்க கோரிக்கை

சுற்றுலா வலயமாக எபடீன் நீர்வீழ்ச்சி