சூடான செய்திகள் 1

பிரதேச, ஊர்வாதங்களைக் கடந்து உளத்தூய்மையுடன் பணி செய்தால் “அரசியல்” புனிதப் பணியாக அமையும்: அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

(UTV|COLOMBO)-மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் துடைக்கும் வகையில், அவற்றை முன்னிலைப்படுத்தி அரசியல் மற்றும் சமூகப் பணிகளை மேற்கொள்வதன் மூலமே சமூகத்திலே நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வடக்கு மற்றும் கிழக்கு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் வதிவிடப் பயிற்சிப் பட்டறையின் இறுதி நாள் நிகழ்வு, மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் சர்வோதய நிலையத்தில் சனிக்கிழமை  (30) இடம்பெற்றபோதே, பிரதம அதிதியாக அமைச்சர் பங்கேற்று உரையாற்றினார்.

கட்சியின் தவிசாளர் அமீர் அலியின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், எஸ்.எம்.எம்.இஸ்மாயில், கட்சியின் செயலாளர் எஸ்.சுபைர்தீன்,
கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் முஷர்ரப் உட்பட முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

கட்சியின் பிரதித்தலைவரும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான நௌஷாட்டின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்த இரு நாள் வேலைப்பட்டறையில் வளவாளர்களாக பாசில் மொஹிடீன், இராசையா, செனவிரத்ன, பஸால் இஸ்மாயில் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், தேர்தல் காலத்தில் நீங்கள் மக்களிடம் வழங்கிய வாக்குறுதிகளை நம்பியே அவர்கள், உங்களுக்கு தமது பொன்னான வாக்குகளை வழங்கினர். மக்கள் பிரதிநிதிகளாக நீங்கள் வெற்றிபெற்ற பின்னர், உங்களை நம்பி வாக்களித்த மக்களை பொடுபோக்காக நினைத்து, அவர்களை பாராமுகமாக எண்ணி அரசியல் நடத்தக் கூடாது. இறைவனால் வழங்கப்பட்ட அதிகாரம் என்னும் இந்த அமானிதமான பொறுப்பை, கிடைத்த சந்தர்ப்பத்தை அரிய பொக்கிஷமாகக் கருதி மக்கள் பணியாற்றுங்கள்.

இறைவன் விரும்பக்கூடிய முறையில் நேர்மையாகவும், சமூக உணர்வுடனும், உயரிய நோக்கத்துடனும் பணியாற்றினால் உங்களுக்கு இறைவனின் உதவி என்றுமே கிட்டுவதோடு, மக்களும் உங்களைத் தொடர்ந்தும் விரும்புவர். ஆதரிப்பர். அரசியல் என்பதை எனது பார்வையில், ஒரு புனிதப் பணியாகவே கருதுகின்றேன். தூயநோக்கத்தோடும் இறையச்சத்தோடும் நான் பணியாற்றி வருவதனால் ஏற்படுகின்ற விளைவுகளின் பிரதிபலிப்பையும், நன்மைகளையும் கண்டு வருகின்றேன்.

எல்லோருக்கும் இவ்வாறான சந்தர்ப்பங்கள் கிட்டுவதில்லை. அரசியலில் ஈடுபட வேண்டுமென்று கனவில் கூட நினைத்திராதவர்கள் இன்று அரசியலுக்குள் உந்தப்பட்டு, உள்வாங்கப்பட்டு, நேர்மையான முறையில்
உழைத்தமையின் காரணமாக வெற்றிபெற்றுள்ளனர். சிலர் பெருமைக்காகவே நல்ல காரியங்களைச் செய்கிறார்கள். வேறுசிலர் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து, அதை அடைய வேண்டுமென்ற நோக்கில் நல்லவற்றைச் செய்வார்கள். ஆனால், உண்மையான உணர்வுடனும், இறையச்சத்துடனும் மக்களுக்கு நன்மை செய்தால், அரசியலிலே ஸ்திரமுள்ளவர்களாக மாறுவதோடு, அவர்களின் மதிப்பும் அதிகரிக்கும். சமூக அந்தஸ்தும் செல்வாக்கும் பெருகும்.

நாம் குறுகிய சிந்தனைகளைக் களைந்து, உள்ளத்தைச் சீர்செய்து உயரிய நோக்குடன் அரசியல் பணியாற்ற வேண்டும். இதன் மூலமே எமது உரிய இலக்கை அடையமுடியும். மக்களின் கருத்துக்களையும், துன்பங்களையும் செவிமடுக்கக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும். மக்களுடன் பேசும்போது இனிய சொற்களைப் பயன்படுத்துங்கள். ஊரின் பிரச்சினைகளை அடையாளங்கண்டு, தகவல்களைத் திரட்டி வைத்துக்கொள்ளுங்கள். உரிய வேளைகளில் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, உரியவர்களிடம் அதனைச் சமர்ப்பித்து, தீர்த்து வைப்பதே மக்கள் பிரதிநிதிகளின் நல்ல இலட்சணமாகும்.

சமூகத்திலே படித்தவனும் இருப்பான், பாமரனும் இருப்பான். எனவே, அவர்கள் எல்லோரையும் ஒரே நிலையில் கருதாமல், பொறுமையுடன் பிரச்சினைகளைக் கையாள்வதன் மூலமே உரிய நோக்கம் நிறைவேறுவதோடு, மக்கள் குறைகளையும் இலகுவில் தீர்க்க முடியும்.

மனப்பக்குவமும், விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கும் மிகவும் இன்றியமையாததாக அமைகின்றது. அரசியல் பணி என்று வரும்போது, இன ரீதியான, மத ரீதியான வேறுபாடுகளை முற்றாகக் களைந்துவிடுங்கள். மனித நேயத்துடன் நீங்கள் பணியாற்றுங்கள். தலைமைத்துவத்துக்கு கட்டுப்பட பழகிக்கொள்ளுங்கள். குரோத உணர்வுகளை வளர்த்துக்கொண்டு, வேண்டுமென்றே சபை நடவடிக்கைகளையும், பொது நடவடிக்கைகளையும் சீர்குலைக்கும் கைங்கரியங்களில் ஈடுபடுவது நமக்கு ஆரோக்கியமானதல்ல.
பிரதேசவாதங்கள், ஊர்வாதங்களைத் தவிர்த்து அரசியல் செய்வதே நல்ல அரசியல்வாதியின் பண்பாகும். அதுவே நமது இலட்சியத்தை அடைய உதவும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இரண்டுநாள் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டவர்களில், முன்னோடித் தலைவர்களாக இனங்காணப்பட்ட மாந்தை மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் ஆசிர்வாதம் சந்தியோகு (செல்லத்தம்பு ஐயா) மற்றும் மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் முஜாஹிர் ஆகியோருக்கு அமைச்சர் ரிஷாட் விருது வழங்கி கௌரவித்தார்.

-சுஐப் எம்.காசிம்-

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சில பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும்…

இலங்கை அணிக்கு 306 வெற்றியிலக்கு

நீரழிவு நோயை முற்றாக குணப்படுத்த முடியாது?