(UTV|COLOMBO)-முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நட்டாங்கண்டலில், 25 ஏக்கர் பரப்பளவில் கைத்தொழில்பேட்டை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்கென அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
மாந்தை கிழக்கு – பாண்டியன்குளம் பிரதேச எல்லைக்குட்பட்ட கிராமங்களில் வாழும் மக்களுக்கான வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வில், பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களின் உதவியுடன் இந்த வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வு, பாண்டியன்குளம் பிரதேச செயலகத்தில் நேற்று காலை (12) நடைபெற்றது. மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் நந்தன், மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முஜாஹிர் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் உட்பட அதிகாரிகளும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,
தற்போதைய காலகட்டத்தில் தொழில் இல்லாப் பிரச்சினை பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. அதுவும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு பிரதேசத்தில் தொழில் இல்லாமலும், வாழ்வாதார வசதிகளின்றியும் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர். எனவே, நட்டாங்கண்டலில் அமைக்கப்படுகின்ற கைத்தொழில்பேட்டையானது, இந்தப் பிரதேச மக்களின் வாழ்வுக்கு கைகொடுக்குமென நான் நம்புகின்றேன். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரேயே, அமைச்சரவையில் இதற்கான அனுமதி கிடைத்தது. சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கை கிடைத்த பின்னர், இதற்கான வேலைகளை விரைவில் ஆரம்பிப்போம்.
தேர்தல் காலத்தில் நாம் இந்தப் பிரதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை அடுத்தே, இந்தக் கைத்தொழில்பேட்டையை நட்டாங்கண்டலில் அமைக்க நடவடிக்கை எடுத்தோம்.
முல்லைத்தீவு மாவட்ட மக்கள், அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அவதிப்படுகின்றனர். கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி ஆகியவை உட்பட இன்னோரன்ன பிரச்சினைகள் அவர்களுக்கு இருக்கின்றன. எனவே, நாம் அவற்றுக்குத் தீர்வுகாண வேண்டுமானால் கட்சி, இன வேறுபாடுகளுக்கு அப்பால், மக்களின் நன்மை கருதி ஒருமித்துச்செயற்பட வேண்டும்.
தேர்தல் காலங்களில் கட்சி நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும், தேர்தல் முடிந்த பின்னர், அடுத்த தேர்தல் வரும் வரையிலான இடைப்பட்ட காலத்தில் வேறுபாடுகளை மறந்து பயணிப்போம். அதுமாத்திரமின்றி, உள்ளூராட்சி மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் இணைந்து செயற்படுவதன் மூலமே, வேலைத்திட்டங்களை சரிவர மேற்கொள்ள முடியும். அந்தவகையில், அனைவரும் மக்கள் பணிக்காக ஒத்துழைத்து, ஒன்றுபட்டுச் செயற்படுவோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]