நாட்டிலே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத நடவடிக்கைகளுக்கு தீனிபோடும் சமூகமாக நாங்கள் இருக்காது, அந்த நடவடிக்கைகளை எவ்வாறு அணைக்க முடியுமோ அவ்வாறான செயற்திட்டங்களுக்கு முன்னுரிமையளித்து செயற்பட வேண்டுமென்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
“எழுச்சிபெறும் பொலன்னறுவை” அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தமன்கடுவ, திவுலான அல்/அக்ஸா மஹா வித்தியாலயத்தில், புதிய இரண்டுமாடி கட்டிடத்தைத் திறந்துவைத்த நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டார்.
பாடசாலை அதிபர் எம்.எச்.பாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் ஸ்ரீயானி விஜேவிக்கிரமரத்ன கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டார். பொலன்னறுவை நகரசபையின் உபதலைவர் எம்.ஐ.அரபா, ஜனாதிபதியின் பணிப்பாளர் டாக்டர். கோர்ட்டன் பெர்னாண்டோ, முன்னாள் பிரதியமைச்சரும், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான ஹுஸைன் பைலா ஆகியோர் உட்பட பல அதிதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,
பொலன்னறுவை மாவட்டத்தின் மண்ணின் மைந்தனான மைத்திரிபால, சிறுபான்மை சமூகத்தின் குறிப்பாக, முஸ்லிம் சமூகத்தின் முழுமையான பங்களிப்புடனும், ஆதரவுடனுமே ஜனாதிபதியானார். அதுவும், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் வன்னி மாவட்டத்தின் 99% சதவீதமான தமிழர்களும், முஸ்லிம்களும் அவருக்கு வாக்களித்து, அவரை நாட்டுத்தலைவராக்கியதில் பெரும்பங்காற்றியவர்கள்.
பொலன்னறுவை மாவட்டத்தில் ஜனாதிபதியின் விஷேட திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் இந்த வேலைத்திட்டத்தில் அல்/அக்ஸா மஹா வித்தியாலயமும் உள்வாங்கப்பட்டு, 20 மில்லியன் ரூபா செலவில் புதிய
இரண்டுமாடிக் கட்டிடத்தை அவர் நிர்மாணித்துத் தந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகின்றது.
அதுவும் இந்தத் திறப்பு விழாவை எங்களை அழைத்து மேற்கொள்ளச் செய்து, உங்களை கௌரவப்படுத்தியிருப்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கின்றது. அதற்காக நமது சமூகத்தின் சார்பாகவும்,
இந்தக் கிராமத்தின் சார்பாகவும் ஜனாதிபதிக்கு எனது நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.
பொலன்னறுவை மாவட்டத்தில் சிங்கள சகோதரர்களுடன் இணைந்து வாழும் முஸ்லிம்கள் மிகவும் பண்பாகவும், நேர்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும். உங்கள் அன்றாடக் கருமங்கள் ஒவ்வொன்றிலும் நேர்மை இருந்தால் நமக்கிடையேயும், இனங்களுக்கிடையேயும் எந்தவொரு பிரச்சினையும் எழுவதற்கு நியாயமில்லை. இஸ்லாம் அன்பாலும், பண்பாலும் வளர்ந்த மார்க்கம் என்பதை நீங்கள் ஏனைய சமூகத்துக்கு உணர்த்த வேண்டும்.
நம்மைப் பொறுத்தவரையில் கல்விக்கு முக்கியத்துவமளிக்கும் சமூகமாக நாம் அன்றுதொட்டு இருந்து வருகின்றோம். இஸ்லாமும் அதையே வலியுறுத்துகின்றது. எனவே, கல்விக்கு உயிர் கொடுக்கும் காரியங்களில் நீங்கள் ஈடுபடுங்கள்.
பெற்றோர்களாகிய நீங்கள் பிள்ளை வளர்ப்பில் கவனஞ்செலுத்துங்கள். பிள்ளைகளை ஒழுக்கமுள்ளவர்களாகவும், பண்பான நடத்தையுள்ளவர்களாகவும் வளர்த்தெடுங்கள். அவர்களின் நடவடிக்கைகளில் அவதானம் செலுத்துங்கள் என்று அமைச்சர் கூறினார்.
-சுஐப் எம்.காசிம்-