சூடான செய்திகள் 1

முசலி மண்ணை மீட்டெடுத்த அமைச்சர் ரிஷாட் கண் கலங்கி அழுதார்

(UTV|COLOMBO)-முசலி…மன்னார் மாவட்டத்தின் ஓர் ஓரமாயுள்ள நிலம். சிலாவத்துறை, கொண்டச்சி, பண்டாரவெளி, மறிச்சுக்கட்டி, அகத்திமுறிப்பு, புதுவெளி, கரடிக்குழி போன்ற கிராமங்களைக் கொண்ட பிரதேசம்.

 

இந்தப் பிரதேசத்திலுள்ள வில்பத்து சம்பந்தமான விடயத்தை இனவாதிகள் பூதாகாரமாக்கியதால், இலங்கை முழுதும் முசலி பிரபல்யம் பெற்றுவிட்டது.

 

முன்னம் ஒரு காலத்தில் முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாகவிருந்த முசலிப் பிரதேசம் படிப்படியாக  அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஆளுகைக்குள் வந்து விட்டிருக்கிறது. தனது சொந்தத் தாய் வீடு போன்று கருதி இந்தப் பிரதேசத்துக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன்  ஆற்றிய சேவைகள் எண்ணிலடங்காதவை.

 

பாசிசப் புலிகளினால் இந்த மண்ணிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் மீண்டும் இங்கு வருகை தந்து, தமது நிலங்களைச் சுத்தம் செய்து வாழ முற்பட்ட போது வில்பத்துக் காட்டை அழிக்கிறார்களென்று இனவாதிகள் போர் தொடுக்கத்  தொடங்கினார்கள். அந்த இனவாதப் போருக்கெதிராக தனியொருவனாக நின்று அமைச்சர் ரிசாத் களமாடினார். அந்தக் களமாடல்தான் அமைச்சர் ரிசாத் மீது சிங்கள, பௌத்த இனவாதிகள் பொய்யான குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் அள்ளியிறைக்கக் காரணமானது. இந்தப் பின்னணியில்தான் முசலிப் பிரதேசம் முழு இலங்கையினதும் பெரும் கவனத்திற்குள்ளானது. இது இவ்வாறிருக்க….

 

அண்மையில் நடந்து முடிந்த பிரதேச சபைத் தேர்தலுக்கு முன்னம் நடந்த பிரதேச சபைத் தேர்தலில் அமைச்சர் ரிசாத் அவர்கள் சார்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்தான் முசலியை வெற்றி கொண்டிருந்தது. இம்முறை நடந்த தேர்தலிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏழு ஆசனங்களைப் பெற்று அதிகூடிய அங்கத்தவர்கள் தெரிவுசெய்யப்பட்ட கட்சியாக விளங்கியது.

 

நாடளாவிய ரீதியில்-குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களில் -உள்ளூராட்சிச் சபைகளின் ஆட்சியைக் கைப்பற்றுவதில் முஸ்லிம் காங்கிரசுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கும் நிலவிய கடுமையான போட்டிகளை நாம் அறிவோம். கிழக்கே சம்மாந்துறை, நிந்தவூர் போன்ற பிரபல்யமான சபைகளை முதன் முறையாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸிடம் பறி கொடுத்த முஸ்லிம் காங்கிரஸ் அதற்குப் பதிலடியாக முசலியைக் கைப்பற்றப் பெரும் பிரயத்தனத்துடன் செயற்பட்டது.

 

முசலியின் ஆட்சியைக் கைப்பற்றுவது அகில இலங்கை மக்கள் காங்கிரசை அழித்து விடுவதற்குச் சமனானது என்று முஸ்லிம் காங்கிரஸ் கருதியது. மன்னார் பிரதேச சபையில் தனது அங்கத்தவர் ஒருவர் கடைசி நேரம் கட்சி மாறி அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு ஆதரவளித்தமையினால் மன்னார் பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸிடம் வீழ்ந்தது பற்றிய கோபத்திலும் கொந்தளிப்பிலும் இருந்த முஸ்லிம் காங்கிரஸ், முசலியை வென்றாவது மன ஆறுதல் அடைவதற்குத் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. அத்தோடு, முசலியின் வெற்றியை வைத்து ரிசாத்தின் மத்திய தளத்தையே சாய்த்துவிட்டதாகத் தம்பட்டமடித்துத் தனது ஆற்றாமைக்கு வடிகால் தேடவும் முஸ்லிம் காங்கிரஸ் முழுமையாகப் பாடுபட்டது.

 

ஒரு வகையில் மற்றைய அனைத்துச் சபைகளையும் விட முசலிப் பிரதேச சபையைக் கைப்பற்றுவதற்கான எத்தனங்கள்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கும் இடையே ஒரு கௌரவத்துக்கான யுத்தமாகவே காணப்பட்டது.

 

வழக்கம் போலவே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது தந்திரங்களையும் சதிகளையும் அரங்கேற்றத் தொடங்கியது. தமிழர் விடுதலைக் கூட்டமைப்பையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மஸ்தான் எம்.பி.யையும் மேலும் பல முஸ்லிம் விரோதப் போக்குடைய தமிழர்களையும் இணைத்துக் கொண்டு முசலியைக் கைப்பற்ற வியூகங்களை வகுத்தது.

 

முசலிப் பிரதேச சபைக்குத் தெரிவான பல அங்கத்தவர்கள் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். முஸ்லிம்காங்கிரசின் தலைவர் திருகோணமலையிலிருந்து விஷேட விமானத்தில் யாழ்ப்பாணம் வந்திறங்கினார். ஊடகவியலாளர்கள் மோப்பம் பிடித்துத் தகவல் சேகரிக்க முற்பட்டார்கள். அவர்களை முஸ்லிம் காங்கிரசின் உயர்மட்டத்தினர் மிரட்டியும் விரட்டியும் ஓரம் கட்டினார்கள்.

 

யாழ்ப்பாண ஹோட்டலில் அங்கத்தவர்கள் இரகசியமாக மூளைச் சலவைக்குட்படுத்தப்பட்டார்கள். பேரம் பேசல்கள் நடந்தன. ஆசை வார்த்தைகள் அள்ளி வீசப்பட்டன. முடிவில் எல்லாமே தமக்குச் சாதகமாக அமையப் போகின்றதென்ற முடிவுக்கு முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் வந்தார்கள். மிக்க திருப்தியோடு யாழ்ப்பாண நாட்டியத்தை முடித்துக் கொண்டார்கள்.

 

நேற்று  (11-04-2018) நண்பகல் பன்னிரண்டு மணி வரைக்கும் தமக்கே வெற்றி என்ற மிதப்பில் கிடந்தார்கள் முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள். ஆனால், எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டான்.

 

டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம்களின் ஜென்ம விரோதியான சார்ள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் சூழ்ந்திருந்த சபையில் மிக்க பொறுமையோடு அமைச்சர் ரிசாத் பதியுதீனும் அமர்ந்திருந்தார்.

 

வாக்களிப்பு நடைபெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் காங்கிரஸ் சார்பாக சுபியான் ஆசிரியரும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக இஷான் என்பவரும் தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்டார்கள். இருவருக்குமிடையே நடந்த வாக்களிப்பில் சுபியானுக்கு 09 வாக்குகளும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளருக்கு 06  வாக்குகளும் கிடைத்தன. அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சுபியான் மாஸ்டர் முசலிப் பிரதேச சபையின் தவிசாளரானார்.

 

அதன் பின்னர் உதவித் தவிசாளர் தெரிவு நடைபெற்றது. இதில் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பைச் சேர்ந்த குலாஸ் என்பவரை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்து வாக்களித்தது. ஆனால், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட  அகில இலங்கை மக்கள் காங்கிரசைச் சேர்ந்த முகுஸீன் ரைசுதீன் ஆசிரியர் 09-06 என்ற வாக்குகளின் அடிப்படையில் உதவித் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

 

வாக்களிப்பு முடிந்த பின்னர் அமைச்சர் ரிசாத் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டார். தனக்கெதிராக அரங்கேற்றப்பட்ட சதிகளும், தனது உள்ளத்தில் ஏற்படுத்தப்பட்ட சித்திரவதைகளும் அவரது ஞாபகத்துக்கு வந்தன. அத்தனையையும் மீறி, அல்லாஹ் தனது பக்கம் இருப்பதையும் எண்ணிப் பார்த்தார். தன்னை அடக்க முடியாமல் உதவித் தவிசாளர் ரைசுதீன் அவர்களின் தோள் மீது முகம் புதைத்து அழுதார். இதனைப் பார்த்த அங்கிருந்தவர்களும், நேரலையைப் பார்த்துக் கொண்டிருந்த பல்லாயிரக் கணக்கானோரும் தமது தலைவனின் அழுகை கண்டு தாமும் அழுதனர்.

 

அது துன்பமும் இன்பமும் கலந்த அழுகை. சதிகள் தந்த வலியும் அல்லாஹ்வின் கருணையை எண்ணிய ஆனந்தமும் கலந்து, கரைந்து வழிந்த கண்ணீர் அது!

 

எஸ். ஹமீத்

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

மரண தண்டனைக்கு எதிரான மனுவை விசாரணை செய்ய 05 நீதிபதிகள் கொண்ட குழு

பூஜித் – ஹேமசிறி விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு