(UTV|NORTH KOREA)-வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், சீனாவுக்கு விஜயம் செய்தார் என்று சில தினங்களாக ஊகங்கள் எழுந்த நிலையில் தற்போது அவரின் விஜயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிம்மின் தந்தை பயன்படுத்திய ரயிலை போன்றதொரு சிறப்பு ரயிலில் உயர் அதிகாரி ஒருவர் சீனாவுக்கு வந்தார் என்ற செய்திகள் வந்தவுடன் அது குறித்த ஊகங்கள் இந்த வாரம் எழுந்தன.
கிம்மின் இந்த விஜயம் சீனா மற்றும் வட கொரியாவால் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே 2011ஆம் ஆண்டு அதிபராக கிம் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் இதுவாகும்.
சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் “வெற்றிகரமாக பேச்சுவார்த்தை” நடத்தினார் என சீன செய்தி முகமையான சின்ஷுவா தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பு, தென் கொரியா மற்றும் அமரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கான தயாரிப்பில் முக்கிய அடியாக கருதப்படுகிறது.
வரும் மே மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்திக்க உள்ளார் கிம். அந்த சந்திப்பு தொடங்குவதற்கு முன்பாக வட கொரியா மற்றும் சீன தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த அதிகாரபூர்வமற்ற விஜயத்தில், அணு ஆயுதங்கள் பயன்பாடு தவிர்க்கப்படும் என கிம் உறுதி அளித்ததாக சின்ஷுவா செய்தி முகமை தெரிவிக்கிறது.
“தென் கொரியா மற்றும் அமெரிக்கா, எங்களின் முயற்சிகளை நல் எண்ணத்துடன் பார்த்தால் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தும் பிரச்சனை தீர்க்கப்படும்.” என கிம் தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன.
வட கொரியாவின் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகள் அமெரிக்காவுடனான பதற்றம் அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாக இருந்தது.
வட கொரியா மற்றும் சீனாவின் கூட்டணியில் இந்த சந்திப்பு ஒரு முக்கிய “மைல்கல்” என வட கொரிய செய்தி முகமை கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.
மேலும் வட கொரியாவுக்கு விஜயம் செய்வதற்கான அழைப்பை ஷி ஜின்பிங் ஏற்றுக் கொண்டார் எனவும் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
தனது மனைவி ரி சோல் ஜுவுடன் விஜயம் மேற்கொண்ட கிம் ஞாயிறு முதல் புதன் வரை சீனாவின் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பிபிசி
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]