சூடான செய்திகள் 1

கண்டிக் கலவரம் ‘களத்தில் நின்று உணர்ந்துகொண்ட நிதர்சனம்’

(UTV|KANDY)-முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைய அடாவடித்தனங்களின் போது, அரசியல் அதிகாரங்களின் ஆழ, அகல பரிமாணங்களை அறிந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது. இறைவன் நாடியோரின் கைகளில்தான் ஆட்சி அதிகாரம் கிடைக்கும் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இறைவனின் இந்த நாட்டத்தில் நன்மையும் இருக்கும், கெடுதியும் இருக்கும் என்பதும் அவர்களின் நம்பிக்கை. உண்மையில் அதிகாரம், அமைச்சுப் பதவிகள் எல்லாமே, அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்களும், அவர்களது குடும்பமும், அவர்களுக்குக்கு நெருக்கமானவர்களும் சௌகரியமாகவும், சுகபோகமாகவும் வாழவுமே என்பது சிலரது வாதமாக இருந்து வருகின்றது.

இவர்கள் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டிய விதங்கள், அது பயன்படும் தருணங்கள், அதற்குள் அகப்படும் சக்திகள் பற்றி தெரிந்திருக்கிறார்களோ, இல்லையோ எனக்குத் தெரியாது.

ஆனால், கண்டி மாவட்டத்தில் திகன, கட்டுகஸ்தோட்டை, ஹாரிஸ்பத்துவ கலவரங்களில் நாங்கள் களத்தில் நின்றபோது, “அதிகாரம்” என்றால் என்னவென்று நேரடியாக அறிய முடிந்தது. குறிப்பாக, அதிகாரம் என்பதன் உண்மையான கருத்தியலை என்னால் நிதர்சனமாக உணர்ந்துகொள்ளவும் முடிந்தது.

பொதுவாக அதிகாரங்களை குறிவைத்துள்ளோரும், குறிவைத்து ஏமாந்துள்ளோருமே பதவி விலக வேண்டுமென்ற கோஷங்களை முன்வைத்து, அதற்கு உரமூட்டுபவர்களாகவும் இருந்து வருகின்றனர் என்ற எண்ணம் என்னுள் எழுந்து நிற்கின்றது. தங்களுக்குக் கிடைக்காததை மற்றவர்களும் அனுபவிக்கக் கூடாது என்ற வெறுப்புணர்வின், வெளிப்பாடாக இதனைக் கருதலாமோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது. எனினும், அவ்வாறான முடிவுக்கும் வரமுடியாத ஒரு பாமரனாக சில வேளைகளில் நான் மாறுவதும் உண்மை.

மருதானை ரயில் நிலையத்துக்கு முன்னால் நடந்து சென்றுகொண்டிருந்த போது, அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எனக்கு அறிமுகமான ஆட்டோ சாரதி ஒருவர் என்னை நோக்கி ஓடிவந்து திகைப்புடனும், வேதனையுடனும் “கண்டி தீப்பற்றி எரிகின்றது. ரிஷாட் சேர் பதவி விலகிட்டார் தானே!” என்று கேட்டார். அவருடைய தவிப்பிலும், கேள்வியிலும் அமைச்சர் ரிஷாட் பதவி விலக வேண்டுமென்ற ஆதங்கம் மேலோங்கி இருந்ததை நான் கண்டுகொண்டேன். “இன்னும் அமைச்சர் பதவி விலகவில்லை” என்று நான் சொன்னால், என்னையும் அந்த சாரதி திட்டிவிடுவாரோ என்று நினைத்து மெதுவாக புன்னகைத்துவிட்டு நகர்ந்தேன். நான் அப்போது சென்றது வீட்டுக்கல்ல. பற்றி எரிந்துகொண்டிருக்கும் கண்டிக்கு அமைச்சரோடு களத்துக்கு செல்வதற்காகவே.

முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமென்று படித்தவர்கள் சொல்கின்றனர். பாமரனும் அவர்களை பதவி விலகச் சொல்கின்றான். “என்னடா இது” என்ற எண்ண அலைகள் கண்டிக்கு வந்து சேரும் வரை எனக்குள் ஊழித் தாண்டவமாடின.

கண்டிக்குச் சென்று நான் கண்டதும், உணர்ந்ததும் முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் என்றால் பதவி விலகி எதிர்ப்பைக் காட்டுவது போல, அதிகாரத்தோடு களத்தில் நின்று பணியாற்றுவதும் ஒரு காத்திரமான செயற்பாடுதான் என்பதை உணர்த்தின பல.

கும்மியிருந்த காரிருளில் நிசப்தம் நிலவி, வெறிச்சோடிக் கிடந்த வீடுகள், கடைகள், வீதிகள். திகன அக்குரணை, பல்லேகலை, கட்டுகஸ்தோட்டை சந்திகளில் ஆங்காங்கே சந்திக்குச்சந்தி பதுங்கி நின்ற படையினர். எரிந்து சாம்பராகிக் கிடந்த முஸ்லிம்களின் உடைமைகள். சேதமாக்கப்பட்டு தகர்ந்து கிடந்த பள்ளிவாசல்கள். இன்னும், எச்சசொச்ச சுவாலைகளுடன் எரிந்துகொண்டிருந்த கட்டிடங்கள். மொத்தத்தில் ஊரடங்கில் உறங்கிக் கிடந்தது கண்டி மாவட்டம். இந்தப் பிரதேசத்தில், ஊரடங்கு வேளையில் அந்த நகருக்குள் ஊடறுத்து எம்மை நுழைய வைத்தது எது? அரசியல் அதிகாரம்தான் அது! என்பதை நான் உணர்ந்துகொள்ள அதிக நேரம் எடுக்கவில்லை.

அதிகாரத்தை, பதவியை தூக்கி எறிந்திருந்தால் ஹக்கீமோ, ரிஷாத்தோ, ஹலீமோ, பைசர் முஸ்தபாவோ, இனவாதிகள் இரை தேடிக்கொண்டிருந்த வேட்டைக்களமாய், ரணகளமாய் இருந்த கண்டி மாவட்டத்துக்குள் நுழைந்திருக்க முடியாது என்ற எண்ணம், அதிகாரம் தேவை என்ற கோட்பாட்டுக்கு இன்னும் புள்ளிகள் சேர்த்தன.

மனச்சாட்சியின் பதிவுகளை பற்றிப்பிடித்தவாறு, பற்றி எரியும் அம்பதென்ன, வெலேகட பகுதிக்குச் சென்றோம். அங்கு இனவாதிகளின் தீயிற்கு இரையாகி, முஸ்லிம்களின் மர ஆலைகள் கொழுந்துவிட்டு எரிந்தவாறு இனவாத அனலைக் கக்கிக் கொண்டிருந்தன. இந்த அராஜகத்தை கண்ணுற்று பதைபதைத்துப்போன அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தீயணைப்புப் படையினரை வரவழைத்தார். அதிகாரத் தொனியில் அதட்டியும், மனிதாபிமானத்துடன் கெஞ்சியும் நடந்த காரியம் அது.

கண்டி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கு இனவாதிகளின் இந்த அட்டகாசம், களத்தில் நின்ற அமைச்சரினால் கொண்டுவரப்பட்டதும், எரிந்துகொண்டிருந்த மர ஆலைத் தளத்துக்கு பொலிஸாரும் வந்து சேர்ந்தனர். அமைச்சரின் அதிகாரமா இவர்களை வரவழைத்தது? இல்லை இது பிரதி பொலிஸ்மா அதிபரின் மனிதாபிமானத்தால் கிடைத்த உதவியா? என்ற நெருடல்கள் என்னுள் அந்த நேரத்தில் எழாமலில்லை.

 

இத்தனைக்கும் கண்டிக் கலவரம் நியாயமானதா? இல்லையா? என்பதை நாடே தீர்மானிப்பதற்கு முன்னர், எனக்குள்ளே ஒரு சுயவிவாதம் இடம்பெற்றுக்கொண்டு இருந்ததை, என்னோடு களத்தில் நின்றவர்கள் அறிந்திருக்க நியாயம் இல்லை.

“என்னடா, இந்த நேரத்தில் வேறொரு பட்டிமன்றம் நடக்கின்றதே” என்று என்னை நானே வெறுத்தவனாய், கட்டுகஸ்தோட்டையில் எரிந்துகொண்டிருந்த முஸ்லிம்களின் மற்றொரு கடைத்தொகுதியை நோக்கி அமைச்சருடன் விரைந்தோம்.

நாங்கள் மட்டுமின்றி அதிகாரம் உள்ள முஸ்லிம் அமைச்சர்களான ஹக்கீமும், ஹலீமும் கண்டிக் கலவரங்களை முடிந்தளவில் கட்டுப்படுத்த, இடத்துக்கு இடம் தொங்கோட்டம் ஓடுவதுபோல் ஓடிக்கொண்டிருந்தனர்.

ஒரு மணித்தியாலத்துக்கு முன்னரே, சுமார் 20 காடையர்கள் வந்து காரியத்தை நிறைவேற்றி விட்டு தப்பிச் சென்றதாக, கடுகஸ்தோட்ட, கஹல்ல மஸ்ஜிதுல் ரஹ்மானியா பள்ளிவாசலின் மூன்றாம் மாடியிலிருந்து குதித்து உயிர்பிழைத்த முஅத்தீன், இமாம் உட்பட ஐவர் மூச்சிழுத்துக்கொண்டு பதைபதைத்தனர். இவற்றை எல்லாம் அரச உயர்மட்டத்துக்கும், படைத்தரப்புக்கும் பக்குவமாக அறிவித்து, பலன்பெற வைத்தது அமைச்சர்களுக்குள்ள அதிகாரங்களே! என்பதை அந்தத் தருணம் மீண்டும் உணர்த்தியது.

அரசை விட்டு வெளியேறி எதிர்ப்பைக் காட்டியிருந்தால், அந்தக் குரல்கள் வெறும் கூக்குரல்களாகவே இருந்திருக்கும். இதை ஊடகங்கள் கண்டிருக்காது. உலகம் உற்று நோக்கியிருக்காது. சர்வதேசம் திரும்பிப் பார்த்திருக்காது. அத்துடன் படையினரும் இதை உடனடியாக பொருட்படுத்தியிருக்கவும் மாட்டார்கள்.

மாறாக முஸ்லிம் அடிப்படைவாதிகளின் குரலாக இதற்கு சாயம் பூசி, அதிகாரம் துறந்த அமைச்சர்களையும் அடக்கி வைக்கவே முயற்சிகள் நடந்திருக்கலாம். அந்தளவுக்கு இனவாதிகள் திட்டமிட்டு அரங்கேற்றிய கலவரம் இது. பல பேச்சுவார்த்தைகளில் பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த கடும்போக்காளர்கள் மற்றும் பௌத்த தேரர்களின் கருத்துக்கள் இவற்றை எமக்குத் தெளிவுபடுத்தின.

இந்த உள்ளார்ந்த விடயங்களைப் பற்றித் தெரியாத, புலத்தின் பின்னணியில் பின்னப்பட்டுள்ள சதிவலைகலைப் பற்றி அறிந்திராத சிலரே அதிகாரங்களை தூக்கி எறியுமாறு ஆவேசப்படுகின்றனர்.

அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் எம்.பிக்கள் பதவி விலகினால், அரசாங்கம் கவிழ்ந்துவிடுமா என்ற கணக்கையும் பார்க்க வேண்டிய தேவை உள்ளது.

ஓர் இனத்துக்கான பார்வையில், முஸ்லிம் எம்.பிக்கள் அரசாங்கத்துக்கு வழங்கும் ஆதரவை விலக்கினால் ஏனைய இனங்களின் பார்வையும், வேகமும் எதிர்மாறாக அதிகரிப்பதே இயல்பு. இதற்கான சாத்தியம் அதிகம் உண்டு. எனவே, அரசுக்கு முட்டுக்கொடுக்க வேறு கட்சிகளில் உள்ள எம்.பிக்கள் ஆதரவளிக்கலாம். அவ்வாறு நிகழ்ந்தால் நாட்டாற்றில் விடப்பட்ட நாய்க்கூட்டமாக நேரிடும். எனவே, பதவி துறக்குமாறு கோஷம் இடுபவர்கள், நமது சமூகத்துக்கு கிடைத்த அதிகாரங்களை மேலும் பலப்படுத்த ஏதாவது அரிய முயற்சியை மேற்கொண்டால், அது சிறப்பாக அமையும். ஒட்டுமொத்த சமூகத்துக்கும் நன்மை பயப்பதாகவும் முடியும் என்பதே கண்டிக் கலவரத்தில், அமைச்சர்களுடன் களத்தில் நின்ற என்னால் மேற்கொள்ளப்பட்ட சுய அளவீடாக இருக்கின்றது.

-இது ஒரு சுயாதீனப் பார்வை-    

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

24 மணிநேரத்திற்குள் மின்சாரம் வழங்கும் ஒரே நாடு இலங்கை

தேர்தல் தொடர்புடைய முறைப்பாடுகள் 851

அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் கொக்கேய்ன் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு