(UDHAYAM, COLOMBO) – ரியோ பரா – ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பனின் காரில் மோதியதால், மிரட்டப்பட்டதாக கூறப்படும் இளைஞர் மர்மமான முறையில் இறந்துள்ளார்.
தமிழக செய்திகள் இதனைத் தெரிவித்துள்ளன.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரியவடகம்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சதீஸ்குமார்.
இவர் நேற்று மதியம் பெரியவடகம்பட்டி மாரியம்மன் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது மண் சறுக்கியதில், மோட்டார் சைக்கிளுடன் அருகில் இருந்த கார் மீது விழுந்துள்ளார். இதில், காரில் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கார் ரியோ பரா-ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற தடகள வீரர் மாரியப்பனின் கார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் மாரியப்பன், அவரது நண்பர் யுவராஜ் மற்றும் சிலர் சதீஸ்குமார் வீட்டிற்கு சென்று, தனது புதிய காரை சேதப்படுத்தியதை கூறி மிரட்டிதாக கூறப்படுகிறது.
மேலும் மாரியப்பனின் நண்பர், சதீஸ்குமாரின் கையடக்க தொலைபேசியை பறித்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் நடந்த பிறகு, திடீரென இளைஞர் சதீஸ்குமார் காணாமல் போன நிலையில், அங்குள்ள ரயில்வே தண்டவாளம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதையடுத்து சதீஸ்குமாரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர், தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை பரா-ஒலிம்பிக் வீர்ர் மாரியப்பன் மறுத்துள்ளார்.
மதுபோதையில் இருந்த சதீஸ்குமார் தனது புதிய காரில் மோதிவிட்டு, நிற்காமல் சென்று விட்டதாகவும், இதுகுறித்து கேட்கவே அவரது வீட்டிற்கு சென்றதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், தனது கார் சேதத்திற்கான செலவை ஏற்பதாக சதீஷ்குமாரின் தாயார் கூறிய நிலையில், வேண்டாம் என கூறிவிட்டு திரும்பி வந்துவிட்டோம் என்றும், மாரியப்பன் தெரிவித்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன.