(UDHAYAM, COLOMBO) – கொட்டகலை யுலிபீல்ட் தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள 19 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக்கொடுப்பதற்கு அமைச்சர் திகாம்பரம் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
கொட்டகலை யுலிபீல்ட் தோட்டத்தில் 30 அம் திகதி அதிகாலை ஏற்பட்ட மண்சரிவினால் இந்தத் தோட்டத்தின் 7 ஆம் இலக்க தொடர்குடியிருப்பில் 4 வீடுகள் சேதத்துக்குள்ளாகின. இதனைத் தொடர்ந்து அந்தத் தொடர் குடியிருப்புப் பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தக்குடியிருப்பைச் சேர்;ந்த 19 குடும்பங்களையும் வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தக்குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தற்காலிகமாக தோட்ட கலாசார மண்டபத்திலும் பாடசாலை மண்டபத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பணிப்புரைக்கேற்ப யுலிபீல்ட் தோட்டத்துக்குச் சென்ற மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தோட்ட முகாமையாளர் மற்றும் பிரதேச கிராம சேவகருடன் தொடர்பு கொண்டதைத் தொடர்ந்து தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.
மேலும் அமைச்சர் திகாம்பரத்துடன் தொடர்பு கொண்டதன் பின்பு அவர் கருத்துத் தெரிவிக்கையில் : யுலிபீல்ட் தோட்டத்துக்கு ஏற்கனவே 26 வீடுகள் அமைப்பதற்கான நிதியை அமைச்சர் திகாம்பரம் ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த நிலையில் தற்போது மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள 19 குடும்பங்களையும் உள்வாங்கி புதிய வீடமைப்புத்திட்டத்தினை மேற்கொள்ளுமாறு அமைச்சர் திகாம்பரம் பணிப்புரை வழங்கியுள்ளார் என்று தெரிவித்தார்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்