ஜனாதிபதியின் அதிகாரத்தையும், பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையையும் வைத்துக் கொண்டு, முறைமையில் மாற்றத்தை கொண்டு வர உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தையும் தமக்கு வழங்குமாறு அரசாங்கம் கோருகின்றது.
இவர்கள் ஆட்சியைப் பிடித்தாலும் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை சரியாகச் செய்கிறார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிமித்தம் புத்தளம் ஆனமடுவ பிரதேசத்தில் நேற்று (06) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
நமது நாடு உட்பட ஏனைய பல நாடுகளின் மீது அமெரிக்க ஜனாதிபதி தீர்வை வரிகளை விதித்துள்ளார். 44% வரியை எம்மீதும் விதித்துள்ளார். இதன் காரணமாக நாமும் பொருளாதாரப் புயலுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த வரி விதிப்பினால் எமது நாட்டின் ஏற்றுமதிப் பொருட்களின் விலை அதிகரிப்பதுடன், போட்டித்தன்மையும் குறையும்.
இதன் காரணமாக, தேவையும் குறைந்து, ஏற்றுமதி பொருட்களின் உற்பத்தி குறைந்து, தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களும் வேலை இழக்க நேரிடும்.
ஐக்கிய மக்கள் சக்தி முன்னரே இது தொடர்பில் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டி, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பிரஸ்தாபித்தது.
அரசாங்கம் இதனை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டதுடன் இன்று வரை இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நாட்டிலிருந்து ஒரு தூதுக்குழுவை அனுப்பவில்லை.
இந்த வரிகள் ஏப்ரல் 09 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்டால் எமது நாடு பாரியளவில் பாதிப்புகளை சந்திக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இந்த வரி நாட்டை மீண்டும் வங்குரோத்துக்கு இட்டுச் செல்லும். ஆணவம், திமிர், பிறர் சொல்வதைக் கேட்காமல் இருத்தல் போன்ற பண்புகளை முன்னிறுத்தி எதிர்க்கட்சியின் கருத்துக்களை புறமொதுக்கி அரசாங்கம் தனித்து தீர்மானம் எடுத்து வருகிறது.
இது நாட்டுப் பிரச்சினை. பிறரது அபிப்பிராயங்களையும் கேட்டு சரியான தீர்மானத்துக்கு அரசாங்கம் வர வேண்டும்.
இது நாட்டின் பொருளாதார இருப்பை தீர்மானிக்கும் விடயம். ஆனபடியால் உறங்காமல் இதற்கு விரைந்து தீர்வுகளை முன்வைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.