உள்நாடுபிராந்தியம்

பெற்றோல் குண்டு வீசியதில் சிறுவன் பலி – இருவர் கைது

களுத்துறை, கமகொட வீதி, ரஜவத்த பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசியதில் சிறு குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக களுத்துறை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சந்தேகநபர்கள் இருவரை கைது செய்துள்ளது.

இந்தத் தாக்குதலில் பெண்ணொருவரும் பலத்த காயமடைந்தார்.

கைது செய்யப்பட்ட இருவரும் தொடங்கொட அக்கர 33 மற்றும் களுத்துறை கோன்கொட பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 25 வயதுடைய இளைஞர்களாவர்.

சந்தேக நபர்கள் 29 ஆம் திகதி இரவு குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

மேலும் குண்டுத் தாக்குதலை நடத்துவதற்கு முன்பு, அவர்கள் களுத்துறை பகுதியில் உள்ள ஒரு பெற்றோல் நிலையத்திற்கு பெற்றோல் வாங்கச் செல்லும் காட்சிகள் சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

சந்தேக நபர்கள் கடந்த 29 ஆம் திகதி இரவு களுத்துறை, கமகொட பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது பெற்ரோல் குண்டை வீசியுள்ளனர்.

இதில் குறித்த வீட்டு பெண் காயமடைந்தார். மேலும், தொலைக்காட்சி பார்க்க அவ்வீட்டிற்கு வந்திருந்த செனால் சந்தீப என்ற ஐந்து வயது சிறுவனும் பரிதாபமாக பலியாகி உள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பான பண கொடுக்கல் வாங்கல் மூலம் பெறப்பட்ட ஒப்பந்தத்தின்படி, காயமடைந்த பெண்ணை குறிவைத்து சந்தேக நபர்கள் பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் எரிந்து போன காயமடைந்த சிறுவனின் அழுகையைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் தாங்கள் கொண்டு வந்த மற்றைய குண்டை வெடிக்க வைக்காமல் தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதலில் சந்தேக நபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், மற்றொரு பெற்றோல் குண்டு, அதை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் இரண்டு கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.

ஒப்பந்தத்திற்கு அமைவாக சந்தேகநபர்களுக்கு 5,000 ரூபா பணம் வழங்கப்படுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக குறித்த சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

அதற்கமைய, சந்தேக நபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related posts

சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள வேண்டுகோள்

ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது

நான் செய்யாத எதையும் சொல்ல மாட்டேன் – பாராளுமன்றத்தில் பொய்யர்கள் பெருகி வருகின்றனர் – நாமல் எம்.பி

editor