தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக அரசாங்கம் எடுக்கவுள்ள தீர்மானம் குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் இன்று (10) விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர் குறிப்பிட்டதாவது, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையால் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலான பரீட்சை ஒன்று 2028 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
அத்துடன், புலமைப்பரிசில் பரீட்சைகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக அரசாங்கத்தால் நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
புலமைப்பரிசில் பரீட்சை ஒரு போட்டிப் பரீட்சையாக மாறியிருப்பது பாடசாலைகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளால் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டிய பிரதமர், பாடசாலைகளுக்கு இடையிலான தர ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார்.