இலங்கை தமிழரசு க்கட்சி இம்முறை தனித்தே உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கூட்டம் நேற்று (08) மாலை கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பாராளுமன்ற குழு பேச்சாளருமான ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், வட்டாரக்கிளை தலைவர்கள், மாவட்ட கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது இலங்கை தமிழரசுக்கட்சியானது இம்முறை உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இங்கு கருத்து தெரிவித்த கட்சியின் பொதுச் செயலாளர் ,
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பாக இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பிரதானமாக ஒவ்வொரு பிரதேசமாக அலசி ஆராய்ந்து என்ன முறையிலான அணுகு முறையில் நாங்கள் இந்த தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பலருடைய கருத்துக்களும் கேட்கப்பட்டு சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டிருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தவரையில் நாங்கள் போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடலாம் என்று நம்பிக்கையோடு எங்களுடைய உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். வருகின்ற வாரத்திற்குள் நாங்கள் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து விடுவதாக தீர்மானித்திருக்கின்றோம்.
ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடுவது வேண்டாம் என்று கூட்டத்தின் போது அனைவராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. அந்த முயற்சி முடிவடைந்து விட்டது என்பது தான் என்னுடைய கருத்து.
எங்களுடைய கட்சியின் தலைவர் அதற்கான ஒரு முயற்சியை முன்னெடுத்திருந்தார். ஆனால் எங்களுடன் பங்காளிகளாக இருந்த கட்சிகள் தாங்கள் வேறு ஒரு கூட்டணியாக இணைந்து இருக்கின்றோம் என்று எங்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.
ஆகையினால் ஒரு அணியாக ஒன்று சேர்ந்து போட்டியிடுவது என்பது இப்போது முடியாத விடயம். தமிழரசு கட்சி தனி அணியாக போட்டியிடும் தேர்தலுக்குப் பின்னர் நிர்வாகங்களை அமைக்கின்ற விடயத்தில் ஒவ்வொரு கட்சிகளுடன் இணைந்து தான் நிர்வாகத்தை அமைக்க வேண்டியதாக இருக்கும்.
அதுதான் உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முறைமை ஆகையினால் அதை குறித்து தொடர்ச்சியாக பல கட்சிகளோடும் பேசிக் கொண்டு இருக்கின்றோம்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டு ஊடகத்தின் நேர்காணல் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,
பல கருத்துக்களை கூறியிருக்கின்றார் என கூறுகின்றீர்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விளக்கங்கள் கூற முடியாது. சில கருத்துக்கள் அவர் ஏற்றுக் கொண்டிருக்கின்றார். சில அத்துமீறல்கள் இடம்பெற்று இருக்கின்றது என்று ஏற்றுக் கொண்டிருக்கின்றார். வேறு சில விடயங்களை மூடி மறைத்து இருக்கின்றார்.
ஆகையினால் ஒட்டுமொத்தமாக அதைக் குறித்து என்னால் கருத்து கூற முடியாது. ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக பாராளுமன்ற தேர்வு குழு விசாரணை செய்தபோது அதற்கு முன்பாக சாட்சியம் கொடுத்திருந்தார்.
அதிலும் அவர் அரசாங்கத்தின் தலைவராக அல்லது பிரதம மந்திரியாக நான் என்னுடைய பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றேன் என்று கூறியவர். அன்றும் அந்த நேர்காணலில் அது தொடர்பாக ஒரு இது வார்த்தைகளை அவரது வாயிலிருந்து வந்ததை நான் அவதானித்தேன்.
ஆனால் ஜனாதிபதி ஆணைக்குழு அவர் ஓரம் கட்டப்பட்டிருந்தாலும் கூட அதனை அவர் பாராளுமன்றத்திற்கு தெரிவித்திருக்க வேண்டும் என்கின்ற குறையினை அவர்கள் கண்டிருக்கின்றார்கள் அது நியாயமான ஒரு குறை.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாங்கள் முற்றும் மாறுபட்ட நிலைமையினையே எதிர்பார்க்கின்றோம். தேசிய மக்கள் சக்திக்கு ஒரு அலையோடு மக்கள் வாக்களித்ததை நாங்கள் கண்டோம்.
ஆனால் இந்த ஒரு சில மாதங்களுக்குள் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களது அபிலாசைகள் தொடர்பான விடயங்களில் எந்தவித முன்னேற்றத்தையும் காட்டவில்லை ஒரு சறுக்கல் போக்கையே காட்டிக் கொண்டிருக்கின்றது என்பதை காணமுடிகின்றது.
இதனை மக்களும் நன்றாக அறிந்திருக்கின்றார்கள் அதற்கு மேல் அதிகமாக மத்திய அரசாங்கம் அவர்களிடம் இருந்தாலும் இருக்கட்டும் ஆனால் எங்களுடைய ஊர் ஆட்சி உள்ளூர் ஆட்சி எங்களோடு இருக்க வேண்டும் என்பதை எங்களுடைய மக்கள் முனைப்பாக இருக்கின்றார்கள்.
தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடுகின்றது. நான் ஏற்கனவே கூறியது போன்று ஒரு கட்சி தனியாக நிர்வாகத்தை ஆட்சி அமைப்பது என்பது சாத்தியப்பாடு குறைவு. இது தேர்தல் முறைமையில் இருக்கின்ற விடயம்.
ஆகையினால் தேர்தலில் பிற்பாடு நாங்கள் மற்றைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து தான் பல இடங்களில் நிர்வாகங்களை அமைக்க வேண்டிய தேவை கட்டாயமாக இருக்கின்றது” என்றார்.
-கிருஷ்ணகுமார்