மழை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக கடந்த காலங்களில் ஏற்பட்ட பயிர்ச்செய்கை பாதிப்புக்கான நட்டயீடுகளை விரைவில் வழங்கி முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
விவசாய, கால்நடை வளங்கள்,காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (06) நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
2025 வரவு செலவு திட்ட யோசனையின் ஊடாக விவசாய, கால்நடை வளங்கள்,காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் மற்றும் அந்த ஒதுக்கீடுகளை உரிய வேலைத்திட்டங்களுக்காக பயன்படுத்துவது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
விவசாய தரவுகளின் காணப்படும் முழுமையற்ற தன்மையின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட சில தீர்மானங்களில் தவறு ஏற்பட்டதையும் ஜனாதிபதி அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினார்.
விவசாய உற்பத்திகளுக்கு சந்தைக்குள் நியாயமான விலையை பெற்றுக்கொடுப்பதுடன் விவசாயிகளின் பாதுகாப்பை போலவே நுகர்வோருக்கும் நியாயம் செய்யப்படும் வகையில் விலைகளை நிர்ணயிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கால்நடை வளங்கள் துறையின் முன்னேற்றத்திற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், ஏற்றுமதி விவசாய பயிர்கள் உக்குவிப்பு, மில்கோ நிறுவனத்தின் முன்னெடுப்பு மற்றும் அதன் முன்னேற்றம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
விவசாய,கால்நடை வளங்கள்,காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ லால்காந்த, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க, விவசாய, கால்நடை வளங்கள்,காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டீ.பீ. விக்ரமசிங்க, ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் கபில ஜனக பண்டார, கமநல சேவை ஆணையாளர் நாயகம் யூ.பீ. ரோஹன ராஜபக்ஷ, ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.கே.எஸ்.ஆர்.டீ.சமரசிங்க,நெல் விநியோகச் சபையின் தலைவர் ஏ.எம்.யூ.பின்லந்த,ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ஏ.எல்.சந்திக உள்ளிட்டவர்களுடன் விவசாய, கால்நடை வளங்கள்,காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மற்றும் நிதி அமைச்சு என்பவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள், மாகாண விவசாய பணிப்பாளர்களும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
-ஜனாதிபதி ஊடகப் பிரிவு