உலகம்

பயணிகள் அலறியதால் பாதியிலேயே நாகை திரும்பிய கப்பல்

நாகையிலிருந்து இலங்கைக்கு சென்ற பயணிகள் கப்பல் திடீரென கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்போது பயணிகள் அலறியதால் கப்பல் பாதியிலேயே நாகை திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த கப்பலில் 17 ஊழியர்கள் உள்பட 95 பேர் பயணம் செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் கப்பல் சேவை வானிலை மாற்றம், சர்வதேச தொழில்நுட்ப அனுமதி உள்ளிட்ட காரணங்களால் தற்காலிகமாக கடந்தாண்டு நவம்பர் 18ம் திகதி முதல் நிறுத்தப்பட்டது.

இதைதொடர்ந்து கடந்த மாதம் 22ம் திகதி முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பமானது.

இருப்பினும் கடல் காற்று அதிகமாக வீசுவதால் பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

வானிலை மாற்றம் சீரடைந்ததும் மீண்டும் மார்ச் 1 முதல் நாகப்பட்டினம்-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு 78 பயணிகளுடன் புறப்பட்டது.

வேளாங்கண்ணிக்கு தென்கிழக்கே 15 மைல்கல் தொலைவில் கப்பல் சென்றபோது கடல் சீற்றம் அதிகமானது.

இதனால் கப்பல் கடலில் தத்தளிக்க ஆரம்பித்ததால் பயணிகள் அலறினர்.

வானிலை மோசமானதை தொடர்ந்து கப்பலை அவசர, அவசரமாக நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கப்பலின் கெப்டன் திருப்பியுள்ளார்.

இதை தொடர்ந்து நேற்று (2) மற்றும் இன்று (3) கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கப்பல் நிர்வாகத்தின் அலட்சியமான போக்கால் இது போன்ற சம்பவம் நடந்ததாக பயணிகள் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க 28 நாடுகள் இணக்கம்

கொவிட் 19 வைரஸ் தொற்றில் இதுவரை 7,987 பேர் பலி

உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்