உள்நாடுபிராந்தியம்

யாழில் மீனவ அமைப்புகள் போராட்டம் – கடுமையான பாதுகாப்பு வழங்கிய பொலிஸார்

எல்லை தாண்டும் இந்திய இழுவைப் படகுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ். தீவக மீனவ அமைப்புகள் இணைந்து இன்று (27) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் ஆரம்பமாகிய குறித்த போராட்டமானது, அருகாமையில் அமைந்துள்ள யாழ். மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தின் உதவி ஆணையாளரிடம் மகஜர் ஒன்றினை கையளித்து தொடர்ச்சியாக யாழ் வைத்தியசாலை வீதியூடாக யாழ். இந்திய துணை தூதரகத்தினை அடைந்தது.

இதன்போது தாண்டாதே தாண்டாதே எல்லை தாண்டாதே! வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்! அள்ளாதே அள்ளாதே எமது வளத்தை அள்ளாதே! வாழ விடு வாழ விடு எங்களை வாழ விடு! எல்லை தாண்டி வந்து உன் இனத்தை பட்டினி கூடாது ஆகிய கோஷங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து யாழ். பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி போராட்டகாரர்கள் மகஜரை வழங்குவதற்கு அனுமதி வழங்கினர்.

இதனை தொடர்ந்து போராட்டக்காரர்களில் சிலர் இந்திய துணைத் தூதுவராலய அதிகாரிகளை சந்தித்து மகஜரை கையளித்தனர்.

இதேவேளை, போராட்டக்காரர்கள் வருகை தந்த பாதைக்கு போக்குவரத்து பொலிஸார் கடுமையான பாதுகாப்பினை வழங்கியதோடு பொதுமக்களை குறித்த பாதையில் பயணிப்பதற்கு அனுமதியும் மறுக்கப்பட்டது.

மேலும் பொலிஸார் இந்திய தூதுவராலயத்திற்கு கடுமையான பாதுகாப்பினை வழங்கி இருந்தனர்.

-பிரதீபன்

Related posts

சிக்குண்டுள்ள இந்தியர்களை இன்று அழைத்துச் செல்ல தீர்மானம்

அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட 4 பேர் கைது

கொரோனா வைரஸ் – 1701 பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில்