அரசாங்கத்தின் மமதையும் பலவீனமுமே நாட்டில் தொடர்ச்சியாக பதிவாகிக் கொண்டிருக்கும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கு பிரதான காரணிகளாகும்.
இவை தேசிய பாதுகாப்பில் மாத்திரமின்றி சுற்றுலாத்துறையின் ஊடாக பொருளாதாரத்திலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
அவிசாவளையில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களின் ஊடாக அரசாங்கத்தின் இயலாமையே வெளிப்படுத்தப்படுகிறது.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகும் போதே பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவி விலகியிருக்க வேண்டும்.
இரு பௌர்னமிகளுக்குள் பாதாள உலகக் குழுக்கள் முற்றாக அழிக்கப்படும் எனக் கூறிய இவர்கள், தேசிய பாதுகாப்பு தொடர்பில் கற்பதற்கு கதிரைகளை எடுத்து வருமாறு எதிர்க்கட்சிகளை அழைத்தனர்.
இவ்வாறு மமதையில் இருந்ததால் தான் இன்று எதனையும் கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதேபோன்று பொருளாதாரம் தொடர்பிலும் வாக்குறுதியளித்தனர்.
இந்த பிரச்சினைகளுக்கு இவர்களிடம் தீர்வு எதுவும் இல்லை. கடந்த அரசாங்கங்களில் இடம்பெற்ற சம்பவங்களும் தற்போது இடம்பெறும் சம்பவங்களுக்கும் எவ்வித மாற்றமும் இல்லை.
கடந்த ஆட்சி காலங்களிலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஆயுதங்களை காண்பிப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட போது பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.
அதே நடைமுறையையே தற்போதைய அரசாங்கமும் பின்பற்றுகின்றது. எனினும் அன்றை விட இன்று பாதாள உலகக் குழுக்கள் வலுப்பெற்றுள்ளன.
நீதவான் முன்னிலையிலேயே சந்தேகநபர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்படுமளவுக்கு தேசிய பாதுகாப்பு மிகப் பாரதூரமான கேள்விக்குறிக்குள்ளாகியுள்ளது.
இவ்வாறான நிலைமை சுற்றுலாத்துறையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.
-எம்.மனோசித்ரா