அரசியல்உள்நாடு

விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் – பிரதமர் ஹரிணி

கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளி சமூகத்தின் கல்வியை மேம்படுத்துவதற்காக மாற்றுத்திறனாளி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களுடன் தொடர்புடைய குழுவினருடனான சந்திப்பொன்று பெப்ரவரி 22 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய மற்றும் சர்வதேச விதிமுறைகளை கவனத்திற்கொண்டு விசேசட தேவைகள் உள்ளவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முன்மொழிவை அவர்கள் முன்வைத்தனர்.

விசேட தேவையுடையவர்களின் உரிமைகளை வலுப்படுத்துதல், விசேட தேவையுடைய பிள்ளைகளின் கல்வித் தரத்தை உயர்த்துதல் மற்றும் அவர்களுக்கான உயர்கல்வி நிலைகளை அறிமுகம் செய்தல் போன்ற பல விடயங்கள் குறித்து இந்த முன்மொழிவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மதியிருக்கம் (ஒட்டிசம்) நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் கல்வியை உயர்த்தவும், அநாதை பிள்ளைகளுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தவும் தற்போதைய அரசு 2025 வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை அவர்கள் பாராட்டினர்.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர்,

விசேட தேவையுடையவர்கள் பொதுச் சமூகத்தில் இயல்பான வாழ்க்கையை முன்னெடுக்க தேவையான சமூக அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். Clean sri lanka திட்டத்தினூடாகவும் நாம் அதனை செய்ய எதிர்பார்க்கின்றோம்.

எமது நாட்டில் பல கொள்கைகள் இருந்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதுதான் பிரச்சனை. நாம் பார்ப்பது போல், கொள்கைகளை செயற்படுத்துவதற்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பது இங்கு மிகவும் முக்கிய விடயம். அதுதான் 2025 வரவுசெலவுத்திட்டத்தில் பல்வேறு பணிகளுக்கு குறிப்பாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்.

கல்வி அமைச்சின் மேற்பார்வையின் கீழ், விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர் கல்வியை ஒரு தலைப்பாக மாற்றுவதற்கு எதிர்பார்க்கிறோம். அதற்கு தேவையானவர்களை நியமித்துள்ளோம்.

கல்வியில் ஒரு பாரிய மாற்றத்திற்கு நாம் இப்போது தயாராகி வருகிறோம். 2025-ம் ஆண்டு இது தொடர்பான கொள்கைகள் தயாரிக்கப்பட்டு, 2026-ல் இதை நடைமுறைப்படுத்தத் தொடங்குவோம். இது முழு முறைமையையும் மாற்றும் நீண்ட காலத் திட்டம். நிச்சயமாக, விசேட தேவைகளைக் கொண்ட பிள்ளைகளின் கல்வி முறைக்கு விசேட கவனம் செலுத்தப்படும்.

அனைத்து பாடசாலைகளிலும் விசேட தேவையுடைய பிள்ளைகள் வழமை போன்று கல்வியில் ஈடுபடுவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க எதிர்பார்க்கின்றோம். ஆனால் இது ஒரு பெரிய செயல்முறை. ஒரேயடியாக அதைச் செய்ய முடியாது, படிப்படியாக அந்த இலக்குகளை அடைவோம் என்று நம்புகிறோம். முதற்கட்ட நடவடிக்கையாக, ஒரு கல்வி நிர்வாக வலயத்தில் குறைந்தபட்சம் ஒரு பாடசாலையிலாவது இந்த பிள்ளைகளை கல்வி கற்க தகுதியுடையவர்களாக மாற்ற நாங்கள் பணியாற்றி வருகிறோம்,” என்று பிரதமர் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா, முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி டி.டி.டி.எல்.தனபால உள்ளிட்ட அங்கவீனமுற்ற சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழு இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

-பிரதமர் ஊடகப் பிரிவு

Related posts

TIKTOK படுகொலை : அறுவர் கைது

“கோட்டா தப்பிச் செல்லாமல் இருந்திருந்தால், இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டார்”ரோஹித

சீமெந்து கல் ஒன்றின் விலை 100 ரூபாயாக உயர்வு