ஐக்கிய மக்கள், ஐக்கிய தேசிய கட்சியுடன் முன்னெடுத்து வரும் பேச்சுவார்த்தை நிறுத்தப்படவில்லை. எதிர்காலத்தில் அது தொடரும்.
அதேநேரம் இந்த பேச்சுவார்த்தை உள்ளூராட்சி மன்ற தேர்தலை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்பட்டதல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி பொதுச் செயலாளரும் பேச்சுவாரத்தை குழுவின் அங்கத்தவருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சிகளுக்கிடையில் இடம்பெற்றுவந்த பேச்சுவார்தை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எதிர்கட்சியில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்துக்கொண்டு பாராளுமன்றத்தில் பலமான எதிர்கட்சியை ஏற்படுத்துவதற்காக எதிர்கட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாட நடவடிக்கை எடுத்தோம். அது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
அதேநேரம் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் இணைந்து செயற்ட வேண்டும் என பலரும் தெரிவித்து வரும் நிலையில், எவ்வாறு இணைந்து செயற்படுவது என கலந்துரையாட ஐக்கிய மக்கள் சக்தி குழுவொன்றை நியமித்தது.
அதில் நானும் ஒருவன். ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் எமது குழு பல சுற்று பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தது. அதில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தன.
கலந்துரையாடல்களின் போது ஒருசில சந்தர்ப்பங்களில் கருது முரண்பாடுகள் இடம்பெறும்போது அந்த விடயங்களை தொடர்ந்தும் அடுத்த கட்டங்களில் கலந்துரையடுவதற்கு விட்டு விடுவோம். அதனால் மிகவும் அமைதியான முறையிலேயே கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
என்றாலும் இந்த பேச்சுவார்த்தை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஒருசிலர் தெரிவித்து வருகின்றனர்.
அவ்வாறு எதுவும் இல்லை. மீண்டும் இந்த பேச்சுவார்த்தை விரைவில் மேற்கொள்ளப்படும்.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியுடனான இந்த கலந்துரையாடல் உள்ளூராட்சி மன்ற தேர்தலை இலக்குவைத்து மேற்கொள்ளப்படுதல்ல.
எதிர்காலத்தில் அரசியல் ரீதியில் எவ்வாறு இணைந்து செயற்படுவது விடயமே கலந்துரையாடப்பட்டு வருகிறது.
அதேநேரம் இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படும்போது தலைமைத்துவம் தொடர்பில் எவ்வாறு செயற்படும் என்பது பலரதும் கேள்வியாகும்.
ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட எனைய கட்சிகள் எங்களுடன் கூட்டணி அமைக்கும்போது அந்த கூட்டணிக்கு சஜித் பிரேமதாசவே தலைவராக இருப்பார்.
அது தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை. அத்துடன் கூட்டணி அமைத்து அடுத்தவரும் தேர்தல்களில் போட்டியிடும்போது எந்த சின்னத்தில் போட்டியிடுவது என இதுவரை கலந்துரையாடப்படவில்லை என்றார்.
-எம்.ஆர்.எம்.வசீம்