ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ் (Marc-André Franch) கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்து கொண்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர், ஊழல் மற்றும் மோசடிகளை தடுப்பது தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
நாட்டின் நிர்வாகத்துறையில் டிஜிட்டல் மயமாக்கலை அறிமுகப்படுத்தி ஊழல், துஷ்பிரயோகம் மற்றும் மோசடிகளை குறைத்துக்கொள்ள முடியும் என மார்க்-ஆன்ட்ரே பிராஞ் சுட்டிக்காட்டினார். அத்துடன், வினைத்திறனை அதிகரிப்பதற்கும் டிஜிட்டல் மயமாக்கல் உதவுவதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், இன மற்றும் மத ரீதியான பிரிவினைகள் இன்றி தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தின் கொள்கைகளை அவர் பாராட்டினார்.
அத்துடன், பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மூலம் இந்நாட்டுக்கு உதவியளிப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களுக்கு சபாநாயர் நன்றி தெரிவித்தார்.
எதிர்காலத்தில் தேவையான துறைகளின் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதற்குத் தயாராக இருப்பதாக மார்க்-ஆன்ட்ரே பிராஞ் தெரிவித்தார்.
மேலும், இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தை ஸ்தாபித்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இயலாமையுடைய நபர்கள் தொடர்பில் பிராந்திய ரீதியான மாநாடொன்றை நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.
அத்துடன், துறைசார் மேற்பார்வைக் குழுக்களை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அனைத்துத் துறைகளும் உள்வாங்கப்படும் வகையில் துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் எண்ணிக்கையை 7 ஆகக் குறைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் மற்றும் ஏனைய அனைத்துக் குழுக்களுக்கும் நிபுணத்துவ அறிவை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு தயாராக உள்ளதாக மார்க்-ஆன்ட்ரே பிராஞ் குறிப்பிட்டார்.