அரசியல்உள்நாடு

சபாநாயகரை சந்தித்தார் இலங்கைக்கான கியூபா தூதுவர்

இலங்கைக்கான கியூபா தூதுவர் கௌரவ ஆண்ட்ரேஸ் மார்செலோ கோன்சாலஸ் அண்மையில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

கௌரவ சபாநாயகருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த கியூபா தூதுவர், இலங்கையுடனான ஒத்துழைப்புக்களை மேலும் விஸ்தரிப்பதற்கு கியூபா தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவது மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்துவதை நோக்காகக் கொண்டு பொதுச் சுகாதார முயற்சிகளுக்காக கியூபா அரசாங்கம் தற்பொழுது வழங்கிவரும் ஒத்துழைப்புக்கள் மற்றும் நிபுணத்துவ உதவிகளையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

கியூபா பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகரின் வாழ்த்துச் செய்தி அடங்கிய கடிதத்தை கியூபா தூதுவர், கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவிடம் கையளித்தார்.

1959ஆம் ஆண்டு முதல் ஆரம்பமான இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மீண்டும் நினைவுபடுத்திய கௌரவ சபாநாயகர், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் தெரிவித்தார்.

இலங்கையில் டெங்கு நோயை ஒழிப்பதற்கு கியூபா அரசாங்கம் வழங்கிவரும் ஒத்துழைப்புக்கும் சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.

அனைத்து இலங்கையர்களும் இன மத வேறுபாடுகள் இன்றி ஊழல் அற்ற, வளர்ச்சியடைந்த நாட்டை ஒன்றிணைந்து கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கை அரசாங்கம் அண்மையில் அறிமுகப்படுத்திய ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் குறித்தும் சபாநாயகர் எடுத்துக்கூறினார்.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை – கியூபா பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் மீண்டும் உருவாக்கப்படவேண்டும் என்பதையும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

Related posts

தடுப்பூசி : அவசர சிகிச்சைப் பிரிவுகளும் தயார் நிலையில்

குருநாகலில் வெட்டுக்கிளிகளால் பயிர்கள் சேதம்

ரஞ்சனின் இரண்டாவது வழக்கு ஒத்திவைப்பு