தையிட்டி விகாரையை உடைப்பதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு வருமா என்பது கேள்விக்குறியே.
ஆகவே சுமூகமான தீர்வை எட்ட வேண்டுமே தவிர மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் வளர்க்கக்கூடிய தீர்வை முன்னெடுக்க கூடாது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (10) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற ஐந்து இலட்சத்துக்கு அதிகமான மக்களினுடைய விருப்பம் என்னவென்பதை நாங்கள் பார்க்க வேண்டும். அந்த வகையில் விகாரை கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றது.
அதில் பூஜை வழிபாடுகளும் தொடர்கின்றது. அன்றைய தினம் பேசாதவர்கள், நடவடிக்கை எடுக்காதவர்கள் இன்றைக்கு இதனை பூதாகரமான பிரச்சினையாக எழுப்புவதற்கு முயல்கின்றனர்.
உண்மையிலேயே இதனை இதயசுத்தியுடன் செய்கின்றார்களா அல்லது எதிர்வரும் நாட்களில் இவர்கள் உள்ளூராட்சி சபை தேர்தலில் இதனை துருப்புச் சீட்டாக பயன்படுத்த முயல்கின்றார்களா என்ற கேள்வி எழுகிறது.
மீண்டும் இனவாதத்தை தூண்ட முடியாது. இனவாதத்தை பயன்படுத்தி இலங்கையை பிளவுபடுத்த முடியாது. நாட்டின் அபிவிருத்தியை பற்றி பேச முடியாது. அபிவிருத்தி துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த நிலையில் அவர்கள் இனவாத மதவாதத்தை தூண்டி மீண்டும் தங்களை நிலைநாட்டிக் கொள்ள சிலர் முயல்கின்றனர்.
எங்கள் அரசாங்கத்தின் கீழ் இந்த போராட்டங்கள் இடம் பெறுகின்றது.
இந்த பிரச்சனைக்கு நாங்கள் மக்களோடு கலந்துரையாடி தீர்வை எட்ட முயல்கிறோம்.
விகாரை சட்டவிரோதமா அல்லது சட்ட ரீதியானதா என்பதை வாதங்களாக தனித்தனியான கருத்துக்களை சொல்ல முடியும். விகாரை அமைக்கப்பட்ட இடம் மக்களுடைய இடம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
அந்த வகையில் நிச்சயமாக அந்த மக்களுக்கு அதற்குரிய நட்ட ஈடு மற்றும் காணிகளை வழங்க வேண்டிய தேவை இருக்கின்றது.
விகாரையை உடைப்பதன் மூலம் தையிட்டி பிரச்சினைக்கு தீர்வு வருமா என்பது கேள்விக்குறியே. ஆகவே சுமூகமான தீர்வை எட்ட வேண்டுமே தவிர மீண்டும்
இனவாதத்தையும் மதவாதத்தையும் வளர்க்கக்கூடிய தீர்வை முன்னெடுக்க கூடாது – என்றார்.