அரசியல்உள்நாடு

ஜனாதிபதி நிதியத்தால் முறைகேடாக வழங்கப்பட்ட நிதி மீளப் பெறவேண்டும் – சாணக்கியன் எம்.பி

ஜனாதிபதி நிதியத்தில் இருந்து முறைகேடாக நிதியை பெற்று இருக்கின்றார்கள் என்றால் அந்த நிதியை மீளப்பெற வேண்டும், மதுபான சாலைகளுக்கு சட்டவிரோதமாக அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தால் அந்த அனுமதி பத்திரங்கள் இரத்து செய்ய வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு எருவில் கல்வி அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த பரிசளிப்பு விழா நேற்று (09) நடைபெற்றது.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசியல்வாதிகளுக்கு மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டது. வழங்கப்பட்ட பட்டியலையும் வாசித்தார்கள், அதற்குப் பிறகு எந்த நடவடிக்கையையும் காணவில்லை.

ஜனாதிபதி நிதியத்தில் இருந்து அரசியல்வாதிகள் பணம் பெற்றதாக ஒரு பட்டியல் வாசிக்கப்பட்டது. அதன் பின்னரும் ஒன்றும் நடைபெறவில்லை, பட்டியல்களை அனைவரும் வெளியிடலாம். ஆனால் அவர்களிடம் இருக்கின்ற பணத்தினை மீளப் பெறவேண்டும்.

மக்களுடைய பணத்தை முறைகேடாக நஷ்டஈடாக எடுத்து இருக்கின்றார்கள் என்றால் அரசாங்கத்தில் இருக்கின்றவர்கள் பட்டியல்களை வெளியிட்டால் மாத்திரம் போதாது. நிதியைப் பெற்றவர்களிடம் இருந்து மீள அந்த நிதியை பெறவேண்டும். அதனைப் பெற்று மக்களுக்கு வழங்க வேண்டும்.

முறைகேடாக ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதியை பெற்று இருக்கின்றார்கள் என்றால் அந்த நிதியை மீளப்பெற வேண்டும் மதுபான சாலைகளுக்கு சட்டவிரோதமாக அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தால் அந்த அனுமதி பத்திரங்கள் இரத்து செய்ய வேண்டும்.

அதை விட்டுவிட்டு அரசாங்கத்தில் இருக்கின்ற அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் வந்து பட்டியல்களை வாசிப்பதன் ஊடாக மக்களுக்கு மக்கள் எதிர்பார்த்த ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கு முடியாது என்பதில் மக்களுக்கு நம்பிக்கை வராது.

இந்த அரசாங்கத்தை குழப்புவதற்கோ, அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவதற்காக நாங்கள் வரவில்லை. சில ஊடகங்கள் அரசாங்கத்தினுடைய எல்லா விடயங்களையும் சரி என்னும் அளவிற்கு வந்துதான் இருக்கின்றன. அது கவலையான விடயம். அரச ஊடகம் என்றாலும் சமமாக செய்திகளை வெளியிட வேண்டும்.

அந்த வகையிலே எதிர்வரும் காலங்களில் நாட்டிலே புதிய அரசியல் அமைப்பு ஒன்று வரும் என்பதை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஜனாதிபதியும் நாட்டிலே புது ஒரு புதிய அரசியல் அமைப்பு கொண்டு வருவோம் என கூறியிருக்கின்றார்” என அவர் இதன்போது தெரிவித்தார்

Related posts

நாட்டில் மேலும் அதிகரிக்கும் கொரோனா

பிரதமர் – இந்திய வெளிவிவகார செயலாளர் சந்திப்பு ஆரம்பம்

சிறைக்கைதிகளை பார்வையிட அனுமதி