அமைச்சர்களின் அழுத்தங்களால் குறுகிய காலத்துக்குள் 06 அரச நிறுவனங்களின் தலைவர்கள் பதவி விலகியுள்ளனர்.
தேசிய மக்கள் சக்திக்குள் காணப்படும் பிரச்சினைகளால் கனிசமான ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வியாழக்கிழமை (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அமைச்சர்களின் அழுத்தங்களாலேயே ஓரிரு மாதங்களுக்குள் 6 நிறுவனத்தலைவர்கள் பதவி விலகியுள்ளனர்.
தற்போதுள்ள 159 ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் கனிசமானோர் இவ்வாண்டுக்குள் நிச்சயம் பதவி விலகுவார்கள்.
அமைச்சொன்றின் செயலாளருக்கு எதிராக மேலதிக செயலாளர் ஒருவர் தனது உரிமைக்காக நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
தேசிய மக்கள் சக்திக்குள் அனுபவம் தொடர்பான பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அதிகாரத்துக்கு வர முன்னர் நாமல் கருணாரத்ன போன்றோர் வயல்களில் இறங்கி முதலைக் கண்ணீர் வடித்து போராட்டங்களை முன்னெடுத்தமையை தற்போது விவசாயிகள் அவர்களுக்கு நினைவுபடுத்துகின்றனர்.
தேர்தலுக்கு முன்னர் நெல் கிலோ ஒன்றுக்கான உற்பத்தி செலவு 160 ரூபா எனக் கூறியவர்கள் இன்று அதனை விடக் குறைவான நிர்ணய விலையையே அறிவித்திருக்கின்றனர்.
அவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நெல் ஆலை உரிமையாளர்களின் ஒத்துழைப்பு கிடைத்தமையால் அவர்களுக்கு இலாபம் கிடைக்கக் கூடிய தீர்மானங்களையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது.
இதனால் அப்பாவி சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இவற்றுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பதற்காக மக்கள் வீதிக்கிறங்கி போராடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர் என்றார்.
-எம்.மனோசித்ரா