மத்திய கலாசார நிதியத்தின் ஆளுனர் சபைக் கூட்டம் அதன் தலைவர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் கடந்த நேற்று முன்தினம் (30) பிரதமர் அலுவலகத்தில் முதன்முறையாக நடைபெற்றது.
இதன்போது மத்திய கலாசார நிதியத்தின் மூலம் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
கணக்குகளைத் தயாரித்தல் மற்றும் உடனடி கணக்காய்வுப் பணிகளை மேற்கொள்ளுதல், சேவைத் தேவைகளைக் கண்டறிந்து அங்கீகரிக்கப்பட்ட வெற்றிடங்களுக்கு ஏற்ப ஊழியர் வெற்றிடங்களை நிரப்புதல், மத்திய கலாசார நிதியத்தின் அதிகாரிகளுக்கு தேவைகளுக்கு ஏற்ப பயிற்சி வாய்ப்புகளை வழங்குதல், கலாசார மரபுரிமைகளை பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
அபிவிருத்தியடைந்துவரும் சுற்றுலாத் துறையில், சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான சேவையை வழங்குதல் மற்றும் மத்திய கலாசார நிதியத்தின் ஊடாக கலாசார மரபுரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல் போன்ற விடயங்கள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடுவதற்கும் இணக்கம் காணப்பட்டது.
இந்நிகழ்வில் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, பிரதியமைச்சர் கமகெதர திஸாநாயக்க, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் நிலன் குரே ஆகியோர் உள்ளிட்ட மத்திய கலாசார நிதியத்தின் ஆளுனர் சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
-பிரதமர் ஊடகப் பிரிவு