அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1வீடியோ

மர்ஹூம் டாக்டர் இல்யாஸ் அநீதிக்கு எதிராக போராட்ட உணர்வோடு செயற்பட்டவர் – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சபையில் தெரிவிப்பு | வீடியோ

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.ஐ.எம்.இல்யாஸ் அவர்கள், அநீதிக்கு எதிராக துணிச்சலோடும் போராட்ட உணர்வோடும் செயற்பட்ட ஒருவர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர்.ஐ.எம்.இல்யாஸ், ருக்மன் சேனாநாயக்க, ரெஜினால்ட் பெரேரா, சிறினால் டி மெல் ஆகியோர் தொடர்பில் இன்றைய தினம் (24) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அனுதாபப் பிரேரணைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்,

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ருக்மன் சேனாநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியின் உருவாக்கத்துக்கு பாடுபட்டவர்களின் பரம்பரையைச் சார்ந்த ஒருவர். நாட்டின் சுதந்திரத்திற்காக உழைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்.

1972இல் இருந்து பாராளுமன்றத்தில் பல வருடங்கள் பணியாற்றியவர். நாட்டுக்கு பல நல்ல பணிகளைச் செய்தவர்.

பல அமைச்சுக்களுக்குப் பொறுப்பாக இருந்து, ஒரு சிறந்த நிர்வாகத் திறமையோடு அவ் அமைச்சுக்களை செயற்படுத்திக் காட்டியவர்.

எனவே, அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதேபோன்று, மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறினால் டி மெல், தேசியப் பட்டியல் ஊடாக இந்தப் பாராளுமன்றத்துக்கு வந்தாலும், ஒரு குறுகிய காலம்தான் பாராளுமன்றத்தில் இருக்கக்கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்தக் காலப் பகுதியில், ஒரு சிறப்பான அரசியல்வாதியாக தன்னை ஆக்கி செயல்பட்ட ஒருவர்.

எனவே, அவரது இழப்பானது நாட்டுக்கு பேரிழப்பாகும். எனவே, சிறினால் டி மெல் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை இந்த உயர் சபையில் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேலும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான மர்ஹூம் டாக்டர்.ஐ.எம்.இல்யாஸ் அவர்கள், புத்தளத்தில் மட்டுமன்றி, இலங்கையிலேயே ஒரு பிரபலமான அரசியல்வாதியாக, சிறந்த மனிதராக, நல்ல வைத்தியராகத் திகழ்ந்தவர்.

அவர் ஒரு போராட்ட உணர்வோடு செயல்பட்டவர். ஈராக்கில் பிரச்சினையாக இருந்தால் என்ன, பாலஸ்தீனத்தில் பிரச்சினையாக இருந்தால் என்ன, ஈரானாக இருந்தால் என்ன? எங்கு மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றதோ, அவ்வாறான அநீதிகளுக்கு எதிராக முன்நின்று போராடிய ஒருவர்.

எல்லாவிதமான ஆர்ப்பாட்டங்களிலும் தலைமைத்துவத்தை வழங்கி செயல்பட்டவர். யாருக்கும் அஞ்சாமல் அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சியவராக, அவ்வாறான பல போராட்டங்களை முன்னெடுத்தார்.

உப்பு போராட்டம் தொடக்கம், மக்களின் நலனுக்காக நடைபெற்ற அத்தனை போராட்டங்களிலும் அரும்பாடுபட்டு பங்காற்றிய ஒருவர். தான்சார்ந்த புத்தளம் மாவட்ட மக்களுக்காக, மாவட்ட நலனுக்காக தன்னால் செய்யக்கூடிய பல நல்ல பணிகளைச் செய்தவர்.

அவ்வாறான போராட்டங்களில் குறிப்பாக, கடைசியாக குப்பைகளை புத்தளத்தில் கொட்டுவதற்கு முயன்றபோது, அந்த மக்களுக்காக பல நாட்களாக நடந்த போராட்டங்களில் பாரிய பங்களிப்புச் செய்தவர்.

அதேபோன்று, அவரது அரசியல் வாழ்க்கையில், ஜனாதிபதி தேர்தலில் கூட ஓரிரு முறை போட்டியிட்டுள்ளார். அதனூடாக, ஒரு வேட்பாளராக இருந்து நாட்டு மக்களுக்கு பல நல்ல செய்திகளைச் சொன்னவர்.

1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து பலவந்தமாக முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோது, புத்தளம் மண்ணை நோக்கி வந்த அந்த மக்களுக்காக அளப்பரிய சேவை செய்த ஒருவர்.

புத்தளம் வாழ் மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்த மக்களுக்கு தங்களால் இயன்ற எல்லா உதவிகளையும் செய்திருக்கிறார்கள். அப்போதிருந்த அரசியல்வாதிகளும் செய்திருக்கிறார்கள்.

என்றாலும், டாக்டர்.இல்யாஸ் அவர்கள் ஒரு வித்தியாசமானவர். அவர் ஒரு வைத்தியராக மற்றும் அவரது மனைவி ஆகியோர், எத்தனையோ இடம்பெயர்ந்த மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் இலவசமாக வைத்திய சேவை செய்தவர்கள்.

அதேபோன்று, அவர்களுடைய தேவைகளை உணர்ந்து தங்களுடைய சொந்தப் பணத்தில் ஏழைகளுக்காக செலவு செய்தவர்கள். அவ்வாறான நல்ல பண்புள்ள ஒருவராக அவரை நாங்கள் கண்டோம்.

இடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்துக்கு வந்து பாடசாலைகளிலும் தோட்டங்களிலும் தங்கியிருந்தபோது, அவர்களைக் குடியேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன், அன்று அவர் சார்ந்திருந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, அந்தக் கட்சியின் தலைவராக இருந்த பெருந்தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களோடு இணைந்து பல பணிகளைச் செய்தவர்.

இடம்பெயர்ந்த மக்களுக்காக அவர் ஆற்றிய சேவையின் வழியாகத்தான், புத்தளத்தில் இருந்துகொண்டு, அவர் ஒரு வேட்பாளராக யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டபோது, யாழ்ப்பாணம் மக்கள் குறிப்பாக, யாழ் முஸ்லிம்கள் இடம்பெயர்ந்து வந்தவர்கள், புத்தளத்தில் முகாம்களில் இருந்தவர்கள் அவரை வெல்ல வைப்பதற்காக வாக்களித்தனர்.

யாழ்ப்பாண மக்களின் வாக்குகளால் அவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்ட போதும், புத்தளம், யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கு மட்டுமன்றி, நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு நடந்த அநீதிகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல்கொடுத்தவர்.

அத்துடன், உலக நாடுகளில் சிறுபான்மை மக்களுக்கு நடக்கின்ற அக்கிரமங்களுக்கு எதிராக, இந்த பாராளுமன்றத்திலே குரல்கொடுத்த ஒருவர்தான் மர்ஹூம் டாக்டர்.ஐ.எம்.இல்யாஸ் அவர்கள். அதேபோன்று, புத்தளம் மாவட்டத்தின் கல்விக்காக, சுகாதாரத் துறைக்காக பாரிய பங்காற்றியவர்.

புத்தளத்தின் இதயம் போன்றிருக்கும் உப்பு உற்பத்தித் துறைக்காக, அதற்கான விலையை பெற்றுக் கொடுப்பது போன்ற விடயங்களில் பெரும் பங்காற்றிய ஒருவர். புத்தளத்தில் தன்னால் முடிந்த அபிவிருத்திகளை செய்து காட்டியவர்.

மேலும், அவருடைய பாராளுமன்ற காலத்திலே, ஈரான் – இலங்கை நட்புறவு சங்கத்தின் தலைவராக இருந்து, ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒரு நல்லுறவை ஏற்படுத்துவதிலும், கலாச்சார ரீதியான, பொருளாதார ரீதியான பல நல்ல விடயங்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கும் பெரும் பங்காற்றியிருக்கிறார்.

எனவே, அவருடைய இழப்பு அவரது குடும்பத்துக்கு மட்டுமல்ல, புத்தளம் மாவட்ட மக்களுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கு பேரிழப்பாகும்.

எனவே, அவர் மறைந்தாலும் அவரது பிள்ளைகளான எனது நண்பர் டாக்டர்.இந்திகாப் மற்றும் ஜமீனா ஒரு உற்சாகமான நகரசபை உறுப்பினராக இருந்து, பல நல்ல பணிகளை தந்தை வழியில் செய்து வருகின்றனர்.

அவருடைய மகள் பஸ்மியா போன்றவர்களை அவர் விட்டுச் சென்றிருக்கிறார். தந்தையின் வழியில், ஊருக்கும் மக்களுக்கும் பல நல்ல பணிகளை இவர்கள் செய்து வருகின்றார்கள். அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இதேவேளை, ஈரான் தூதரகத்திலிருந்து இங்கு வருகைதந்து, ஒரு பார்வையாளராக கலந்துகொண்டிருக்கும் டாக்டர்.பி.முஸானி குறாசி அவர்களுக்கு இத் தருணத்தில், அவரது குடும்பத்தினர் சார்பாக, எனது கட்சி சார்பாக நன்றியை கூறிக்கொண்டு, மர்ஹூம் டாக்டர்.ஐ.எம்.இல்யாஸ் அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை இறைவன் வழங்க வேண்டும் என்று பிரார்த்தித்து விடைபெறுகிறேன்” என்று கூறினார்.

-ஊடகப்பிரிவு

வீடியோ

Related posts

நாளை முதல் ரயில் சேவைகள் மீள ஆரம்பம்

அரிசி விலை தொடர்பில் ஜனாதிபதி அநுரவின் அதிரடி தீர்மானம்

editor

அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரம் குறைவு – வெரிட்டே ரிசர்ச்சின் ஆய்வில் தகவல் .