பாலஸ்தீன விடுதலை போராட்ட அமைப்பான ஹமாசுக்கும், பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட இஸ்ரேலுக்கும் இடையிலான சமாதான பேச்சுக்கள் கத்தாரில் மும்முறமாக நடைபெற்று வரும் நிலையில் எதிர்வரும் 20ம் திகதிக்கு முன்னர் காஸாவில் யுத்த நிறுத்தம் ஏற்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் திகதி தொடங்கிய இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தாக்குதல்கள் சுமார் 465 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.
இந்த அகோர தாக்குதல்களினால் இதுவரை சுமார் 46 ஆயிரம் அப்பாவி காஸா மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து உடல் ஊனமுற்றவர்களாக மாறியுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் என பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் குறிப்பிடுகிறது.
காஸாவின் 93 சதவீத நிலப்பரப்பும் கட்டிடங்களும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழகம், பாடசாலைகள், சிறுவர் பள்ளிகள் என சுமார் 500க்கும் அதிகமான கல்வி நிலையங்கள் மொத்தமாக அழிவுகளை சந்தித்துள்ளன.
இந்நிலையில் தான் தற்போது ஒரு சமாதான உடன்படிக்கைக்கு இரு தரப்பினரும் முன்வந்துள்ள நிலையில் கத்தார் முன்னின்று சமாதான உடன்படிக்கையை மேற்கொள்கிறது.
உடன்படிக்கையின் முதல்கட்டமாக பாலஸ்தீன சுதந்திர போராளிகள் அமைப்பு தம்மிடம் இருக்கும் இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 33 பேரை விடுதலை செய்வார்கள் என்றும் அவர்களுக்கு பதிலாக இஸ்ரேலினால் அநியாயமாக கைது செய்யப்பட்டுள்ள ஆயிரம் பாலஸ்தீன மக்களை விடுவிக்க வேண்டும் என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்வரும் 20ம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்க்கவுள்ள நிலையில் அதற்கு முன்பதாக சமாதான உடன்படிக்கை கையெழுத்தாகும் என கத்தார் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
தொடரும் சமாதான பேச்சுக்களுக்கு மத்தியில் நேற்றைய தினமும் 94 அப்பாவி பொதுமக்களை கொன்றது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ராணுவம் என்கிற செய்தியை அல்-ஜஸீரா வெளியிட்டுள்ளது.