இலங்கைக்கு வந்த இஸ்ரேலியர்களுக்கு எதிராக ஏற்கனவே கூறப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோரியுள்ள தேசிய ஷுரா சபையானது, இஸ்ரேலிய வீரர்களுக்கான விசா வழங்குதலை இலங்கை நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இலங்கையில் இஸ்ரேலிய பிரஜைகள் தொடர்பான அவதானங்களும் சமூக நல்லிணக்கத்திலும் தேசிய பாதுகாப்பிலும் ஏற்படலாமென எதிர்பார்க்கப்படும் பாதிப்பும் என்ற தலைப்பில் தேசிய ஷுரா சபையின் பொதுச்செயலாளர் ரஷீத் எம். இம்தியாஸ் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
07 ஜனவரி 2025,
மாண்புமிகு அனுர குமார திசாநாயக்க, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி, ஜனாதிபதி செயலகம், கொழும்பு 01.
மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு,
இலங்கையில் இஸ்ரேலிய பிரஜைகள் தொடர்பான அவதானங்களும் சமூக நல்லிணக்கத்திலும் தேசிய பாதுகாப்பிலும் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படும் பாதிப்பும்
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கணிசமான சிவில் அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய சிவில் அமைப்புகளின் உயர் மட்ட அமைப்பான தேசிய ஷூரா சபை, அண்மைக் காலமாக நாட்டிற்குள் வரும் இஸ்ரேலிய பிரஜைகள் குறித்தும் சமூக நல்லிணக்கம், தேசிய நலன், மற்றும் தேசிய பாதுகாப்பில் அந்த விவகாரம் ஏற்படுத்த முடியுமான தாக்கங்கள் குறித்தும் தனது கவலைகளை தெரிவிக்க விரும்புகிறது.
கட்டுப்பாடுகளற்ற சுற்றுலாத் துறையினால் கிடைக்கும் பொருளாதார நன்மைகளையும் வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கைக்குள் வருவதற்கான உரிமையையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.ஆனால், இஸ்ரேலிய இராணுவத்தில் பணியாற்றிய மற்றும் பணியாற்றுபவர்கள் சுற்றுலாப் பயணிகளாக இங்கு வருவது பல்வேறு காரணங்களுக்காக ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
- இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிரான சர்வதேசத்தின் கண்டனம்: தற்போதைய மத்திய கிழக்கு மோதல்களில் இஸ்ரேலிய இராணுவத்தினால் மேறகொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல்கள் ஐக்கிய நாடுகள் சபை உள்ளடங்கலான சர்வதேச் சமூகத்தின் பரவலான கண்டனத்திற்கு உட்பட்டுள்ளன. நிராயுதபாணிகளான பலஸ்தீன பொதுமக்களை குறிவைத்து மேற்கொள்ளப்படும் இந்த மோதல்ளும் அத்துமீறல்களும் அம்மக்களை துன்பத்திற்கும் இடப்பெயர்வுக்கும் ஆளாக்கியுள்ளதுடன், சர்வதேச ரீதியிலும் இலங்கை மக்களிடமும் பலத்த அதிர்வலைகளை அவை உருவாக்கியுள்ளன.
- பாலஸ்தீன் விவகாரம் குறித்த இலங்கையின் நிலைப்பாடு: இஸ்ரேல்-பாலஸ்தீன் மோதலுக்கு அமைதியான தீர்வினையும் இருநாட்டு தீர்வின் அடிப்படையிலான சுயாதீன பாலஸ்தீன தேசத்தை அமைப்பதையும் இலங்கை தொடர்ந்து ஆதரித்து வருகிறது. எனினும் இஸ்ரேல் பாராளுமன்றம் 2024 ஜூலை 18 ஆம் திகதி பாலஸ்தீன தேசம் உருவாக்கப்படுவதை மறுத்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த உத்தியோகபூர்வ நிலைப்பாடும் பாலஸ்தீனத்தை முற்றாக அழித்துதொழிக்கும் இஸ்ரேலிய இராணுவத்தினரின் வருகையும் நாட்டு பிரஜைகள் மத்தியில் பாரிய அதிருப்தியை தோற்றுவிக்கின்றது.
- குற்றச்சாட்டுக்கள் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகள்: கடந்த காலங்களில் இஸ்ரேல் எமது அரச படைகளுக்கு ஆயுதப் பயிற்சிகளை வழங்கிய வேளை, ஒரே நேரத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவப் பயிற்சிகளை வழங்கியிருந்ததை நாம் நினைவிற் கொள்ள வேண்டும். தற்போது சில இஸ்ரேலிய பிரஜைகள் விஸா காலம் முடிவடைந்த பின்னரும் அத்துமீறி தங்கியிருப்பதாகவும், நிலங்கள் மற்றும் சொத்துக்களை வாங்குவதாகவும், அங்கீகரிக்கப்படாத வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், சட்டவிரோத மத கட்டமைப்புகளை நிர்மாணிப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. அதேவேளை இஸ்ரேலிய இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் ‘மன அழுத்தங்களைப் போக்குவதற்கான’ சுற்றுலாக்களும் அவர்களின் இராணுவ சேவைக்கு ஊக்கமளிப்பதும் சமூகத்திற்குள்ளால் பல்வேறு அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளன.
- சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படும் சாத்தியம்: இந்த விவகாரத்தின் உணர்வுபூர்வ நிலையைப் பயன்படுத்தி தவறான நடத்தைகளைக் கொண்டோர் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கவும் இலங்கையின் பன்மைத்துவத்துக்கு சவால் விடும் வகையில் சமூக நல்லிணக்கத்திற்கு தீங்கிழைக்கவும் முற்படலாம்.
- மேலும், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் பிராந்திய புவிசார் அரசியல் சக்திகள், வெளிநாட்டு நலன்கள், இஸ்லாமிய வெறுப்பு மற்றும் சுயநலம் மற்றும் அரசியல் உள்நோக்கங்களால் உந்தப்படும் சில உள்நாட்டு சக்திகள் இலங்கை விடயமாக தேவையற்ற செல்வாக்கை செலுத்தலாம். கந்த காலங்களில் வங்குரோத்து நிலையிலிருந்த நாட்டை மீட்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை இவை சீர்குலைக்கக்; கூடும் என்பதை நாங்கள் அறிவோம். கடந்த காலங்களில் இன மோதல்கள் மற்றும் தவறான தகவல் பரப்புரைகளை மேற்கொண்ட நபர்களைப் பற்றி மாண்புமிகு உங்களுக்கு நன்கு தெரியும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த முக்கியமான சூழ்நிலையை வெளிச் சக்திகள் தமது சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பதை உறுதிசெய்வதன் மூலம், இந்த விஷயத்தில் நாம் மிகவும் விழிப்புடன் இருப்போம் என்றும் நம்புகிறோம்.
- இவற்றின் அடிப்படையில் தேசிய ஷூரா சபை பின்வரும் கோரிக்கைகளை விடுக்க
விரும்புகிறது:
(அ) குற்றச்சாட்டுகளை விசாரித்தல்: இலங்கைக்கு வந்த இஸ்ரேலியர்களுக்கு எதிராக ஏற்கனவே கூறப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக பொதுக் களத்தில் உள்ள பல குற்றச்சாட்டுகள் முன்னுரிமை அடிப்படையில் மற்றும் தேசிய நலன் கருதி விசாரிக்கப்பட வேண்டும்.
(ஆ) இஸ்ரேலிய வீரர்களுக்கான விஸாவை நிராகரித்தல்: தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் குடிமக்களின் சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவும், உளவுத்துறை சேவைகள் மற்றும் இஸ்ரேலின் ஆயுதப்படைகளில் பணியாற்றும் அல்லது பணியாற்றிய நபர்களுக்கு விஸாவை இஸ்ரேலிய பாலஸ்தீனம் போர் முடியும் வரை நிராகரித்தல்.
(இ) விஸா விண்ணப்பங்களின் ஆய்வுகளை மேம்படுத்துதல்: குடியேற்ற விதிமுறைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக இஸ்ரேலிய நாட்டினரிடமிருந்து விஸா விண்ணப்பங்களுக்கு கடுமையான சோதனை நடைமுறைகளை செயல்படுத்தல்.
(ஈ) சுற்றுலா நடவடிக்கைகளைக் கண்காணித்தல்: அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மற்றும் சமூக அமைதியின்மையைத் தூண்டக்கூடிய எந்தவொரு நடத்தை உட்பட அனைத்து சட்டவிரோதச் செயல்களையும் தடுக்க சுற்றுலா நடவடிக்கைகளின் கண்காணிப்பை அதிகரித்தல். இவற்றுடன் இலங்கை தேசிய பாதுகாப்பையும் சமூக ஒற்றுமையையும் பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவமும் உள்ளது.
- சமநிலையான சர்வதேச உறவுகளைப் பேணுதல் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். எவ்வாறாயினும், தேசிய பாதுகாப்பு, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றறைப் பாதுகாப்பதும் இலங்கையின் விழுமியங்களை நிலைநிறுத்துவதும் அதேபோல் முக்கியமானதாகும்.
- மாண்புமிகு நீங்கள் இந்த எமது கரிசனைகளை உரிய முறையில் பரிசீலித்து அவற்றை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என நம்புகிறோம்.
இக்கோரிக்கைகளுக்கான உங்களது பதிலை தேசிய ஷூரா கவுள்சிலுக்கு நீங்கள் தரும் பட்சத்தில் அதன் 12 உறுப்பு அமைப்புகளுக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் அதனை எமக்கு எத்திவைக்க முடியும்.
இவ்வண்ணம்
உண்மையுள்ள
ரஷீத் எம். இம்தியாஸ்,
பொதுச் செயலாளர்,
தேசிய ஷூரா சபை