இந்திய பிரீமியர் லீக்கில் வீரர்கள் ஏலத்தில் இரண்டாவது அதிக விலைபோனவரான சுரேஷ் ஐயர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) இரவு நடைபெற்ற பிக் போஸ், ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஐயர் பங்கேற்றிருந்தபோதே அவர் தலைவராக நியமிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
‘என் மீது அணியினர் நம்பிக்கை வைத்ததற்கு நான் பெருமை அடைகிறேன். பயிற்சியாளர் (ரிக்கி) பொண்டிங்குடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்பார்த்துள்ளேன்’ என்று ஐயர் குறிப்பிட்டுள்ளார்.
30 வயதான ஐயர் 2022 தொடக்கம் 2024 வரை கொல்கத்தா நைட் ரைடஸ் அணியின் தலைவராக செயற்பட்டு கடந்த ஆண்டு கிண்ணத்தை வென்றதோடு ஐ.பி.எல். வரலாற்றில் சம்பியன் கிண்ணத்தை வென்ற எட்டு அணித் தலைவர்களில் ஒருவராக இடம்பிடித்துள்ளார்.
அண்மையில் நடந்த ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தில் கடும் போட்டிக்கு பின்னர் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் 26.75 கோடி ரூபாவுக்கு (இந்திய நாணயப்படி) வாங்கியது. இந்தத் தொகை குறுகிய காலத்துக்கு ஐ.பி.எல். வரலாற்றில் அதிக விலையாக இருந்தபோதும் 27 கோடி ரூபாவுக்கு விலைபோன ரிஷப் பண்ட் அந்த சாதனையை முறியடித்தார்.
2015 இல் டெல்லி கெபிடல்ஸ் அணியில் ஐ.பி.எல். அறிமுகம் பெற்ற ஐயரின் மூன்றாவது அணியாகவே பஞ்சாப் கிங்ஸில் இணைந்துள்ளார்.