திடீர் தீர்மானங்களால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது! அரசுக்கு தயாசிறி அறிவுரை
அரசாங்கத்தின் திடீர் தீர்மானங்களால் எந்தவொரு சாதகமான மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
குருணாகலில் நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் சிறந்ததாகும். ஆனால் பேரூந்து மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சிறிது கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
குறிப்பிட்டவொரு கால அவகாசத்தை அவர்களுக்கு வழங்கி இந்த காலப்பகுதிக்குள் அவர்கள் எவ்வாறானவற்றை செய்ய வேண்டும், எவற்றை தவிர்க்க வேண்டும் என்பது தொடர்பில் தெளிவூட்ட வேண்டும்.
இதுவரைக் காலமும் அவர்கள் போக்குவரத்து அதிகாரசபையின் வர்த்தமானி அறிவித்தலுக்கமையவே செயற்பட்டு வந்தனர்.
தற்போது திடீரென அவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தும் போது அவர்களுக்கு அது அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடும்.
அதேபோன்று வருமான வரி திணைக்களம் மற்றும் சுங்க திணைக்களத்திலும் தற்போது காணப்படும் முறைமையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
அவசரமாக நடைமுறைப்படுத்தும் எந்தவொரு தீர்மானத்தின் ஊடாகவும் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது.
பழைய அதிகாரிகளை பழிவாங்கும் செயற்பாடுகளை மாத்திரம் முன்னெடுத்துக் கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை என்றார்.