அரசியல்உள்நாடு

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போட முடியாது – மஹிந்த தேசப்பிரிய

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியிலோ அல்லது ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலோ நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுகிறது.

தேர்தலை விரைவாக நடத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எக்காரணிகளுக்காகவும் தேர்தலை பிற்போட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

கொழும்பு தேசிய நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்காகவும், ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து, மீண்டும் வேட்புமனுக்களை கோரும் வகையில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சிடம் பல யோசனைகளை முன்வைத்துள்ளோம்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை கடந்த 2023.03.09 ஆம் திகதியன்று நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் நிதி நெருக்கடி உட்பட இதர காரணிகளால் தேர்தல் நடத்தப்படவில்லை.

அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாத நிலையில் தேர்தல் வாக்கெடுப்பு பிற்போடப்பட்டது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது.

ஆகவே தேர்தலை வெகுவிரைவாக நடத்துமாறு நடத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இதற்கமைய உள்ளுராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியிலோ அல்லது ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலோ நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுகிறது.

தேர்தலை விரைவாக நடத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எக்காரணிகளுக்காகவும் தேர்தலை பிற்போட முடியாது.

தேர்தல் சட்ட திருத்தத்துக்குள் உள்ளடக்கப்படாத விடயங்களை உள்ளூராட்சி மன்றத்தின் போது ஆணைக்குழு செயற்படுத்தலாம்.

இதனால் எவ்வித சட்ட சிக்கல்களும் ஏற்படாது.

பெண் பிரதிநிதித்துவத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்றார்.

-இராஜதுரை ஹஷான்

Related posts

பொரளை பகுதியில் ஒருவர் கூறிய ஆயுதங்களால் வெட்டி கொலை

தினேஷ் சாப்டர் கொலை வழக்கு – விசாரணை அதிகாரிகளுடனான சந்திப்பிற்கு பொலிஸ் மா அதிபரினால் அழைப்பு

ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கு மற்றுமொரு குறை