அரசியல்உள்நாடு

கலாநிதி பட்டம் தொடர்பில் சர்ச்சை – மௌனம் கலைக்க போகும் சபாநாயகர்

கலாநிதி பட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து சபாநாயகர் அசோக்க சபுமல் ரன்வல எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) பாராளுமன்றத்துக்கு விசேட அறிவிப்பை விடுக்கவுள்ளதாக அறிய முடிகிறது.

பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17), புதன்கிழமை (18) ஆகிய இரு தினங்களில் கூடவுள்ளது.

சபாநாயகர் அசோக்க சபுமல் ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பில் அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பில் பாரிய சர்ச்சை எழுந்துள்ளன.

முடிந்தால் கலாநிதி பட்டத்தை பகிரங்கப்படுத்துங்கள் அல்லது பதவி விலகுங்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பகிரங்க சவால் விடுத்ததை தொடர்ந்து சபாநாயகரின் கல்வி தகைமை குறித்து அனைவரும் கவனம் செலுத்தினர்.

சபாநாயகரின் கல்வி தகைமை குறித்த சர்ச்சை தீவிரமடைந்த நிலையில் பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் சபாநாயகரின் சுயவிபரக் கோவையில் இருந்து கலாநிதி பட்டம் நீக்கப்பட்டு ‘ கௌரவ சபாநாயகர்’ என்ற மரியாதைக்குரிய விழிப்பு மாத்திரம் சேர்க்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் தனது கல்வி தகைமையை பகிரங்கப்படுத்த வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குறிப்பிடுகின்ற நிலையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அவதானம் செலுத்தியுள்ளது.

சபாநாயகரின் கல்வி தகைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க, சபாநாயகர் அசோக்க ரன்வலவை காட்டிலும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் நேர்மையானவர்.

தனக்கு ஆங்கிலம் தெரியாது. புகையிரதத்தில் வடை விற்ற நிலையில் மக்களுக்கு சேவையாற்றி அரசியலுக்கு பிரவேசித்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாக சாமர சம்பத் பாராளுமன்றத்திலும், பொது இடங்களிலும் பலமுறை பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகர் அசோக்க ரன்வல இல்லாத கலாநிதி பட்டத்தை இருப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டார். படித்தவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு மக்கள் இவ்வாறானவர்களை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்துள்ளார்கள் என்று அதிருப்தி வெளியிட்டார்.

தான் மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்த சந்தர்ப்பத்தில் சபாநாயகர் அசோக்க ரன்வல மின்சார சபையின் தொழில்நுட்ப உத்தியோகஸ்த்தராக பணிபுரிந்தார். கலாநிதி பட்டம் உள்ளவர் தொழில்நுட்ப உத்தியோகஸ்த்தராக பணிபுரிய வேண்டிய அவசியம் கிடையாது.

சபாநாயகர் விவகாரத்தில் விரைவான தீர்மானம் எடுக்க வேண்டும். நாட்டு மக்களும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

-இராஜதுரை ஹஷான்

Related posts

ஆரம்ப பாடசாலைகள் இன்று திறப்பு

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான ‘Ever Ace’ கப்பல் கொழும்புக்கு

QR குறியீட்டு முறையின் ஊடாக எரிபொருள் விநியோகம் இன்று முதல்