2028ஆகும் போது கடன் மீள செலுத்தும் பின்னணியை ஏற்படுத்திக்கொள்வதே நாடு எதிர்கொண்டுள்ள பாரிய சவாலாகும். சரியான திட்டமிடலை மேற்கொள்ளாவிட்டால் நாடு மீண்டும் வங்குராேத்து நிவைக்கு தள்ளப்படும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழமை (13) இடம்பெற்ற பெண்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
இலங்கையில் இருக்கும் பிரதான பிரச்சினை பொருளாதாரமாகும். 2022ஆம் ஆண்டு பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்தது. அதன் பிரகாரம் எமது நாடு வங்குராேத்தடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. எமக்கு முதலாவதாக வங்குராேத்து நிலையில் இருந்து வெளியேறுவதற்கே இருந்தது. அதனை நாங்கள் மாத்திரம் அறிவித்தால் மாத்திரம் போதாது. சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
நாணய நிதியத்துடன் கலந்துரையாடுமாறு உலக நாடுகள் அதன்போது எங்களுக்கு தெரிவித்திருந்தன. சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்த பின்னர் அவர்களுக்கு அறியத்தருமாறும் அந்த நாடுகள் தெரிவித்தன. நாங்கள் 18 நாடுகளிடம் கடன் பெற்றிருந்தோம். அதற்கு மேலதிகமாக பிணைமுறி பத்திரங்கள் உலகில் தனியாருக்கு விற்பனை செய்திருந்தது.
ஆரம்பமாக இந்த வங்குராேத்து நிலையில் இருந்து மீள்வது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடினோம். வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தை ஸ்திர நிலைக்கு கொண்டுவந்து கடன் செலுத்துவது தொடர்பில் நிலைபேரான தன்மையை ஏற்படுத்துவது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடினோம்.
மீண்டும் கடன் செலுத்துவதற்கு எந்தளவு காலம் வழங்க முடியும் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடினோம். எமது கடனில் எந்தளவு தொகையை குறைத்து வழங்க முடியுமா என்ற விடயம் தொடர்பாகவும் நாங்கள் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்தோம்.
2028ஆம் ஆண்டில் கடன் செலுத்துவது ஆரம்பமாகும் என நாணய நிதியம் எமக்கு தெரிவித்தது. 2028ஆம் ஆண்டு கடன் செலுத்தாவிட்டால் எமக்கு பிரச்சினையாகும். 2028இல் கடன் செலுத்த ஆரம்பித்து 2042 ஆகும்போது கடன் செலுத்துவதை முடிவுக்கு கொண்டுவருமாறும் அவர்கள் எமக்கு அறிவித்தார்கள்.
குறித்த 18 நாடுகள் மற்றும் பிணைமுறி பத்திரம் மூலம் எங்களுக்கு 8000 முதல் 12000 மில்லியன் டொலர் வரை பெற்றுக்காெள்ள முடியும். அந்த நடவடிக்கையை மேற்கொள்ள எமக்கு பொருளாதார இலக்கு இருக்கிறது. அந்த பொருளாதார இலக்குக்கு அமைய செயற்பட்டாவிட்டால் எமக்கு நன்கொடைகள் கிடைப்பதில்லை.
எமக்கு கடன் செலுத்த முடியாது என அறிவித்தால் மீண்டும் நாங்கள் வங்குராேத்து நிலைக்கு ஆளாகுவோம். இதனை நாங்கள் 18 நாடுகளுடன் கலந்துரையாடினோம். அந்த 18 நாடுகளும் இதற்கு இணக்கம் தெரிவித்தன. சிறிய திருத்தங்களை முன்வைத்தோம். அதன் பின்னர் சர்வதேச நாணய நிதியம் மற்றும் இந்த நாடுகளுடன் இருந்த இரு தரப்பு ஒப்பந்தத்தை நாங்கள் பிணைமுறியாளர்களுக்கு பெற்றுக்கொடுத்தோம். அவர்களும் அதற்கு இணக்கம் தெரிவித்தனர்.
நாங்கள் தேர்தலுக்கு செல்ல முன்னர் அந்த விடயங்களின் நடவடிக்கைகள் அனைத்தையும் முடித்தாேம். அதன் பிரகாரம் ஒக்டோபர் 4ஆம் திகதி புதிய அரசாங்கத்துக்கும் அறிவித்தாேம். அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். தற்போது நாங்கள் அதன் பிரகாரம் வேலை செய்ய வேண்டும். எங்களுக்கு கடன் செலுத்த முடியும் என்பதை காட்ட வேண்டும்.
அதன் பின்னர் நாங்கள் 2028முதல் கடன் செலுத்த வேண்டும். கடன் பெற்ற பின்னர் அவற்றை செலுத்தும்போதும் இணக்கப்பாட்டுக்கமைய செயற்பட வேண்டி இருக்கிறது. ஆரம்ப சில வருடங்களில் எங்களுக்கு 300 மில்லியன் டொலர் செலுத்த இருக்கிறது. அதன் பிரகாரமே நாங்கள் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்கிறோம்.
அதேபோன்று தேசிய கடன்களை மீள செலுத்துவதற்கும் வேலைத்திட்டங்களை தயாரித்தோம். தேசிய மற்றும் சர்வதேச கடன் என மொத்தமாக 84000 மில்லியன் டொலர் இருக்கிறது. அதில் 42 மில்லியன் டொலர் வெளிநாட்டு கடனாகும். அடுத்த அரைவாசி தேசிய கடனாகும். எமக்கு இருக்கும் பெரிய பிரச்சினை 2028ஆம் ஆண்டில் இந்த கடனை செலுத்த இருப்பதாகும்.
இதனை செய்யாவிட்டால் நாங்கள் வங்குராேத்து நிலைக்கு தள்ளப்படும். அதனை தடுப்பதாக இருந்தால் நாங்கள் எமது பொருளாதார இலக்கை அடைந்துகொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதாக இருந்தால் 2028ஆம்போது எமது அரச வருமானம் தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 15வீதமாக இருக்க வேண்டும். தற்பாேது அது நூற்றுக்கு 12வீதத்துக்கும் குறைவாகும். ஒவ்வொரு வருடமும் அந்த அளவை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.
தேவையான வருமானத்தை பெற்றுக்கொள்ள மக்களுக்கு புதிய வரி சுமத்த முடியாது. வட் வரி அதிகரிக்க முடியாது. அப்படியானால் புதிய வருமானம் என்ன? அவற்றை எவ்வாறு பெற்றுக்கொள்வது? அத்துடன் எங்களுக்கு நிவாரணம் வழங்க முடியுமா?. அடுத்த வருடம் நிதி தேடிக்கொவதாக இருந்தால் வாகனம் இறக்குமதிக்கு இடமளிக்க வேண்டும்.
அப்போது அதன் மூலம் தீர்வை வரி கிடைக்கும். அதேநேரம் எங்களுக்கு பொருளாதாரத்தை விரைவாக முன்னேற்ற முடியுமானால் நிறுவனங்களினால், வியாபாரங்களினால் எமது வரி வருமானத்தை அதிகரிக்கும். அத்துடன் வரி செலுத்தவேண்டிய சிலர் அதனை தவிர்த்து வருகின்றனர். அந்த வரிகளை அறவிட்டுக்கொள்ளும் அளவை அதிகரித்துக்கொள்ள வேண்டும். பின்னர் புதிய வரிகள் தொடர்பில் எங்களுக்கு சிந்திக்க வேண்டி ஏற்படும்.
2025ஆம் ஆண்டுக்காக இவ்வாறான வேலைத்திட்டம் தொடர்பாகவே எமக்கு சிந்திக்க இரக்கிறது . இதுதொடர்பில் திறைசேரி எவ்வாறு கலந்துரையாடுகிறது என இன்று எனக்கு தெரியாது. அத்துடன் அந்த நடவடிக்கைகள் முடிவடைவதில்லை. அடுத்த வருடம் எங்களுக்கு 6 ரில்லியன் தேடிக்கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த பணத்தை எங்கிருந்து தேடிக்கொள்வது?. எந்தவொரு அரசாங்கமும் இதுதொடர்பாகவே அதானம் செலுத்த வேண்டி இருக்கிறது. இதுதொடர்பில் கவனம் செலுத்தாமல் சத்தமிட்டும், வேறு விடயங்களை கதைத்தும் பயன் இல்லை.
அதனால் எங்களுக்கு பழைய முறையில் வியாபாரம் செய்ய முடியாது. பழைய முறைக்கு அரசியல் செய்ய முடியாது. பழைய முறைக்கு ஊடகங்களை கொண்டுசெல்ல முடியாது. ஒவ்வொருவரும் புதிய வேலைத்திட்டத்துடன் செயற்பட வேண்டும். அதனை மறக்க வேண்டாம். எமக்கு கடன் செலுத்தும் நிலை இல்லாமல் போனால் அனைத்தும் அழிந்துவிடும். நாங்கள் அதனை நினைவில் வைத்துக்கொண்டு முன்னோக்கிச்செல்ல வேண்டும் என்றார்.
-எம்.ஆர்.எம்.வசீம்