அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் பலம் நாளாந்தம் நலிவடைந்து வருகிறது – ரிஷாட்

தேசிய மக்கள் சக்தியின் பலம் நாளாந்தம் நலிவடைந்து வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய மக்கள் கூட்டணியில், திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் வைத்தியர் ஹில்மி மஹ்ரூபை ஆதரித்து, சனிக்கிழமை (10) கிண்ணியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,

“ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நடந்த எல்பிட்டி உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முடிவுகள், தேசிய மக்கள் சக்தியின் பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

பொதுத் தேர்தலில், ஜனாதிபதியின் கட்சிக்கு அரசாங்கத்தை அமைக்கும் பலம் கிடைக்குமா? என்ற சந்தேகத்தையே, இந்த தேர்தல் முடிவு தோற்றுவித்துள்ளது.
எமது கட்சி வேட்பாளரான வைத்தியர் ஹில்மி மஹ்ரூப், நகர சபைத் தலைவராகச் செயற்பட்டதால், பல அனுபவங்களைப் பெற்றுள்ளார்.

திறமையாளர்களையே எமது கட்சி இத்தேர்தலில் நிறுத்தியுள்ளது.
கடந்த காலங்களில், நீங்கள் எங்களுக்குத் தந்த அமானிதங்களை முறையாகப் பயன்படுத்தினோம். மக்களை மீள்குடியேற்றுவது என்பது இலகுவான காரியமல்ல.

இனவாதிகளின் எத்தனையோ இடையூறுகளை எதிர்கொண்டே எமது மக்களை குடியமர்த்தினோம்.
எமக்கெதிராக வழக்குத் தொடுத்தனர். எம்மைச் சிறையில் அடைத்தனர். எமக்குப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தினர்.

இவற்றுக்கெல்லாம், எதிர்நீச்சலடித்தே நமது சமூகப் பணிகளைச் செய்தோம்.
எனவே, எங்கிருந்தோ வந்தவர்களை எம்.பி.யாக்காமல், சமூகத்துக்கு நெருக்கமானவர்களை வெற்றிபெறச் செய்யுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்

-ஊடகப்பிரிவு

Related posts

விவசாய அமைப்பினருடன் தாஹிர் எம்.பி கலந்துரையாடல்

editor

கூட்டத்தை குழப்ப வந்த மு.க ஆதரவாளர்களை தெரிக்கவிட்ட ரஸ்மின்

editor

துறைமுக அதிகாரசபை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்