கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான திகதியை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளும் முறை தற்போது அமுலில் உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த முறை நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமுல்படுத்தப்பட்டது.
“கடந்த அரசாங்கத்திற்கும் வழங்குனருக்கும் இடையிலான உடன்படிக்கையின் பிரகாரம் தேவைக்கு ஏற்ப வெற்று கடவுச்சீட்டுகளை தொகையாக இறக்குமதி செய்ய முடியாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். “கடவுச்சீட்டுகள் இப்போது பகுதிகளாக கிடைக்கின்றன.
ஒக்டோபரில் 50,000, நவம்பர் இறுதியில் 100,000, டிசம்பர் இறுதியில் 100,000. இதுதான் அவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தம். இந்த 750,000ஐ ஒரே தடவையில் கொண்டுவருவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் அவர்கள் உடன்பாட்டுக்கு வரவில்லை.
அந்த பிரச்சனையால் தான் மக்களுக்கு தேவைக்கு ஏற்ற கடவுச்சீட்டுகள் தொகையை வழங்குவது எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. இது நாம் உருவாக்கிய பிரச்சனை அல்ல. அனுபவம் உள்ளவர்களால் உருவாக்கப்பட்ட நெருக்கடி.
நாங்கள் அதைத் தீர்க்க முயற்சித்தோம், இப்போது அதை கிட்டத்தட்ட தீர்த்துவிட்டோம். முதலில் கடவுச்சீட்டு கொண்டுவர தலையிட்டோம். இப்போது அது நிறைவடைந்தது. இனி கடவுச்சீட்டு விநியோகத்திற்கான முறைமையை உருவாக்க வேண்டும்.
நாங்கள் அந்த மாதம் தலையிட்டு இப்போது இணையவழி ஊடாக கடவுச்சீட்டு கோருவதற்கான வழிமுறையை உருவாக்கியுள்ளோம். நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இணையவழி ஊடாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
அவசர தேவைகள் என்ற பிரிவின் கீழ் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்போது சாதாரண முறையில் இணையவழி மூலம் இந்த சில மணி நேரங்களுக்குள் பலர் விண்ணப்பித்துள்ளனர். இன்று வரிசை இல்லை.
புதிதாக கடவுச்சீட்டு பெறுவோர் முன்பதிவுகளை பெற இன்று முதல் இணையவழி முறை அமுலுக்கு வருகிறது. தற்போது அந்த நிலைமை தொடர்பான தீர்வுகளை வழங்கியுள்ளோம்.”