அரசியல்உள்நாடு

நாடு மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் – வரிசை யுகம் உருவாகும் – ராஜித சேனாரத்ன

பணம் அச்சிடப்படுவதால் மீண்டும் பண வீக்கம் அதிகரித்து பொருட்களின் விலைகளும் அதிகரிக்கவுள்ளன. மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடு மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்.

வரிசை யுகம் உருவாகும். இதனை முன்னரே அறிந்ததால் தான் ஒன்றரை ஆண்டுகளில் முடியாவிட்டால் விட்டுச் செல்வதாக அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

களுத்துறையில் இன்று செவ்வாய்கிழமை (05) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வங்குரோத்தடைந்த நாடொன்று மிகக் குறுகிய காலத்தில் அந்த நிலைமையிலிருந்து மீண்டிருக்கின்றது என்றால் அது இலங்கை மாத்திரமே.

அதற்குரிய பெருமை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது அரசாங்கத்தையே சேரும். எவ்வாறிருப்பினும் அதனை மக்கள் மறந்து விட்டனர்.

தற்போது யார் வேண்டுமானாலும் நாட்டை நிர்வகித்துச் செல்லலாம் என்று மக்கள் எண்ணுகின்றனர். ஆனால் அது தவறாகும். இதனை நாம் தேர்தலுக்கு முன்னரே கூறினோம்.

எனினும் 42 சதவீத மக்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் தற்போது ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்தை அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஏற்றுக் கொண்டிருக்கின்றார்.

செப்டெம்பர் 19ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடன் கையெழுத்திடப்பட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் அவ்வாறே கையெழுத்திடப்படுகிறது.

தற்போது நாடு பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 14ஆம் திகதியாகும் போது மக்கள் படிப்படியாக இதை உணர்ந்து கொள்வார்கள்.

நாணய நிதியம் குறிப்பிட்டுள்ள இலக்கை நோக்கி செல்ல வேண்டும். ஆனால் அந்த இலக்கை எவ்வாறு அடைவது என்பது குறித்த அறிவு இந்த அரசாங்கத்துக்கு இல்லை.

எனவே தான் 98 000 கோடி கடன் பெற்றுள்ளனர். ஒருபோதும் பிணைமுறி கடன் பெறப் போவதில்லை எனக் கூறியவர்கள் தான் இந்தளவு கடனைப் பெற்றிருக்கின்றனர்.

கடன் பெற்று நாட்டை நிர்வகிப்பதென்றால் அரசாங்கம் எதற்கு எனக் கேட்டனர். தற்போது அதையும் இவர்கள் செய்கின்றனர்.

பணம்அச்சிடப்படுவதால் மீண்டும் பண வீக்கம் அதிகரித்து பொருட்களின் விலைகளும் அதிகரிக்கவுள்ளன. மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடு மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்.

வரிசை யுகம் உருவாகும். இதனை முன்கூட்டியே கணித்ததன் காரணமாகவே ஒன்றரை ஆண்டுகளுக்கு இதனை செய்வதாகவும், முடியாவிட்டால் விட்டுச் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் அதைக் கூறினாலும் அவரது சகாக்கள் அதனை விரும்பவில்லை.

தொழிற்சங்கங்கள் கலைக்கப்படும் என்று நிபுனாராச்சி கூறுகின்றார். கடந்த ஆட்சி காலங்களில் தொழிற்சங்கங்களை வீதிக்கிறக்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட இவர்கள் தற்போது தமது தேவை நிறைவேறிய பின்னர் அவற்றைக் கலைப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

மறுபுறம் ஜனாதிபதி மற்றும் ஹரிணி அமரசூரிய ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துக் கொண்டிருக்கின்றனர். நாட்டை நிர்வகிக்க முடியாவிட்டால் கோட்டாபய ராஜபக்ஷவைப் போன்று பயந்து ஓடாமல் பலவந்தமாக அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வோம் என்பதே இவர்களது கொள்கையாகவுள்ளது.

தற்போது கிடைத்துள்ள அனைத்தையும் இழக்கும் போது தான் மக்களுக்கு எமது ஆட்சியில் கிடைத்தவற்றின் பெறுமதி புரியும் என்றார்.

-எம்.மனோசித்ரா

Related posts

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

ஹரின், மனுஷ உள்ளிட்டோருக்கும் அமைச்சுப் பதவிகள் [முழு விபரம்]

அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு